Published : 15 Nov 2023 05:05 AM
Last Updated : 15 Nov 2023 05:05 AM

மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை:சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்கு தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் நாளை (நவ.16) முதல் ஜன.16-ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சபரிமலை தேவஸ்தான அறிவிப்பின்படி, டிச.27 முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால், டிச.26 முதல் 29-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும்.

சிறப்புப் பேருந்துகளை www.tnstc.in என்னும் இணையதளம் மற்றும் TNSTC செயலி வாயிலாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463 மற்றும் 94450 14416 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x