Published : 14 Nov 2023 06:08 PM
Last Updated : 14 Nov 2023 06:08 PM

அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து நீலகிரி ‘மாஸ்டர் பிளான்’ மாற்றி அமைப்பது கட்டாயம். ஏன்?

கட்டிட காடாக காட்சியளிக்கும் உதகை காந்தல் நகரம்.

உதகை: நீலகிரி மாவட்டத்தை காக்க கொண்டு வரப்பட்ட மாஸ்டர் பிளான் சட்டம் அமல்படுத்தி 30 ஆண்டு காலமான நிலையில், இந்த சட்டத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் நிலநடுக்கப் பட்டியலில் உள்ளதாலும், மழைக் காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படுவதாலும் இப்பகுதியில் கட்டப்படும் கட்டிடங்கள் முறையான திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கிடையே, ‘நிலச்சரிவு, மண்சரிவு, நிலநடுக்கப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடப்பது அபாயத்துக்கு வழி வகுக்கும்’ என்று, 1949-ம் ஆண்டுக்கு பின் பல முறை புவியியல் துறை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதை மீறியதால், கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்று, 2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அபாயங்களின்போது நடந்த ஆய்வில் தெரியவந்தது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெருகும் கட்டிடங்களை கட்டுப்படுத்தவும் 1993-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ‘மாஸ்டர் பிளான்’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம், 1996-ம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் வந்த அரசுகள் இந்த சட்டத்தை கண்டுகொள்ளாததால், இந்த சட்டம் நீர்த்துப்போய் கட்டிட காடாக நீலகிரி மாவட்டம் மாறி வருகிறது. இந்த சட்டத்திலுள்ள விதிகளை மீறி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள் பெருகின. பெருகும் கட்டிடங்களை கட்டுப்படுத்த வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டனர்.

அனுமதியற்ற கட்டிடங்கள்: உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,337 கட்டிடங்களை இடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இப்பிரச்சினை தற்போது மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் விதிமுறைகளை மீறும் வகையில் கட்டிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குன்னூரில் 847 அனுமதியற்ற கட்டிடங்களும், 26 கட்டிடங்கள் நகராட்சி நிலத்திலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 1661-ஆக உயர்ந்துள்ளது.

நிலுவையில் வழக்குகள்: மலை மாவட்டத்தில் விதிமீறிய கட்டிடங்கள் அதிகரித்து வந்ததால், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. விதிமுறைகளை மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள், நீதிமன்றங்களின் உத்தரவின்படி துரிதப்படுத்தப்பட்டன. அதற்கு சிலர் தடை உத்தரவு பெற்றுள்ளதால், நடவடிக்கை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ‘கன மழை காலங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், கடந்த காலங்களைவிட அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது’ என, பேரிடர் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மாஸ்டர் பிளான் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்: இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறும்போது, "நீலகிரியின் இயற்கையை பாதுகாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாஸ்டர் பிளான் சட்டத்தை கொண்டுவந்தார். அந்த சட்டம், மாவட்டத்திலுள்ள நகராட்சிகளில் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, கட்டிடத்தின் உயரம் 21 அடியாக இருக்க வேண்டும். வீடு கட்ட குறைந்தபட்சம் 3 சென்ட் இடம் இருக்க வேண்டும். நகரமயமாக்கல் காரணமாக, நகரை நோக்கி மக்கள் குடியேறி வரும் நிலையில், நகரங்களில் நிலம் குறைந்து வருகிறது. பலர் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். மாஸ்டர் பிளான் சட்டப்படி, விளை நிலங்களில் வீடு கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. நிலப் பயன்பாட்டை மாற்றியமைத்த பின்னரே வீடு கட்ட முடியும். மேலும், காப்பு காடுகளிலிருந்து 150 மீட்டர் தள்ளியே வீடு கட்ட வேண்டும்.

மாஸ்டர் பிளான் சட்டத்தில் பல விதிமுறைகள் உள்ளதால், சாமானிய மக்களுக்கு இது புலப்படுவதில்லை. அறியாமையால் விதிமுறைகளை மீறி அவர்கள் வீடு கட்டிவிட்டதால், வீட்டை இடிப்பதாக அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர். கடன்பட்டு கட்டப்படும் வீடு இடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை மக்கள் நாடுகின்றனர். இந்த விவகாரத்தை முடித்துக் கொடுப்பதாக கூறி, அதிகாரிகளை சமாதானப்படுத்த வீட்டின் உரிமையாளர்களிடம் பணத்தை பெற்று, அதிகாரிகளுக்கு வழங்கிவிடுகின்றனர்.

பணம் கிடைத்துவிட்டால், விதிமீறல்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. குடியிருப்புகளுக்கு கறார் காட்டும் அதிகாரிகள் தங்கும் விடுதிகள், வணிக கட்டிடங்கள் அகியவற்றில் நடக்கும் விதிமீறல்களை கண்டும் காணாததுபோல இருக்கின்றனர். நீதிமன்றம் உத்தரவிட்டால், கண்துடைப்புக்காக இடிப்பு நடவடிக்கைகளை நடத்தி, அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடுகின்றனர். மாஸ்டர் பிளான் சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகள் காசு பார்த்துவிடுகின்றனர்" என்றனர்.

உரிய நேரத்தில் கட்டிட அனுமதி: நீலகிரி சிவில் பொறியாளர்கள் சங்க தலைவர் ஆர்.சி.திலக்குமார் கூறும்போது, "உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மாஸ்டர் பிளான் சட்டத்தை திருத்துவதுடன், மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 2016, 2021-ம் ஆண்டுகளில் இச்சட்டத்தை மாற்றியமைத்திருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்துவரும் மக்கள் தொகையால், இச்சட்டத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்‌சி மற்றும்‌ கட்டிட விதிகள்‌, மாவட்ட நிர்வாகத்தால்‌ திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட திட்டக்‌குழுவில்‌ குறைந்தபட்சம் ‌இரண்டு பரிந்துரைக்கப்பட்ட சிவில்‌ பொறியாளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். தற்போது கட்டிடத்துக்கான அனுமதி பெறுவதில் காலதாமதமாவதால், உள்ளூர் மக்கள் வீடுகள் கட்ட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கட்டிட அனுமதியை உரிய நேரத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

காலத்துக்கேற்ப மாற்றம் அவசியம்: நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டம் அமல்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2011-ம் ஆண்டு இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால், மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. மாஸ்டர் பிளான் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுற்றுலா, ரியல் எஸ்டேட், வர்த்தகம் மற்றும் விவசாயத் துறைகளில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலப் பயன்பாடு மாற்றத்தால், இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தை பாதுகாக்க, மாஸ்டர் பிளான் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நகராட்சிகள் மட்டுமின்றி, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து தொலைநோக்கு பார்வையில் இந்த சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். சுற்றுலா மாவட்டமாக உள்ளதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில்கொண்டு, அதற்கு தேவையான உள் கட்டமைப்புகள், சாலைகள், தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x