Published : 14 Nov 2023 06:09 PM
Last Updated : 14 Nov 2023 06:09 PM
மதுரை: “புகார் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் பிறகே நீதிமன்றம் வர வேண்டும்” என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த முருகேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி மாவட்டம் காட்டூரில் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் 5 தளங்கள் கொண்ட புதிய ஜவுளி கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஜவுளி கடை சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வழியாகவே திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதிய ஜவுளி கடைக்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி, மருத்துவனைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஜவுளி கடையில் அசம்பாவிதம் நிகழ்ந்தால் வெளியேற அவசர வழிகள் இல்லை. கட்டிப்பணிகள் முடிவடையாமல் அவசரம் அவசரமாக கடையை திறந்துள்ளனர். எனவே, விதிமீறல் காரணமாக ஜவுளிக்கடை செயல்பட தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் நவ.6-ல் புகார் அளித்தார். நவ.7-ல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் புகார் மனு இன்னும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சேரவில்லை. எனவே மனு விசாரணைக்கு உகந்தது இல்லை” தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “புகார் அனுப்பிய மறுநாளே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் அதிகாரிகளால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். புகார் அளித்தால் அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். உரிய கால அவகாசம் வழங்காமல் நீதிமன்றத்தை அணுகினால் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
இருப்பினும் மனுதாரர் தாக்கல் செய்துள்ள புகைப்பட ஆதாரங்களை பார்க்கையில் மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது என தெரிகிறது. இதனால் மனுதாரர் இந்த மனுவை திரும்ப பெற்றுக்கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். இந்த மனு முடிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT