Published : 14 Nov 2023 06:05 PM
Last Updated : 14 Nov 2023 06:05 PM
புதுச்சேரி: புதுச்சேரி - பாகூர் மூலநாதர் கோயிலுக்கு தீர்த்தவாரி மண்டபத்தை உடனடியாக கட்டித்தர வலியுறுத்தி பாகூர் மக்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பாகூர் பகுதிக்கு புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
புதுச்சேரி - பாகூர் மூலநாதர் சாமி கோயிலுக்கு சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தீர்த்தவாரி மண்டபம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆற்று திருவிழாவின் போது, மூலநாதர் சாமி இந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம். இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணிக்காக இந்த தீர்த்தவாரி மண்டபத்தை, நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.
தீர்த்தவாரி மண்டபம் இருந்த இடம் சோரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்றும், இழப்பீடு தொகை தங்களுக்கு தான் சேர வேண்டும் எனவும், அந்த கிராம மக்கள் உரிமை கோரினர். மேலும், அந்த இடத்தில் புதிதாக தீர்த்தவாரி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கான சொந்த இடத்தை கணினி மயமாக்கும்போது, ஆவணத்தில் நீக்கப்பட்ட குருவிநத்தம் கிராமத்தின் பெயரையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வல்லவன் தலைமையில் பாகூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம் ஆகிய 3 கிராம முக்கியஸ்தர்களுடன் கடந்த மாதம் 30-ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. பாகூர் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் தீர்த்தவாரி மண்டபம் தொடர்பாக 3 கிராமத்தினரும் உரிமை கோரியதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதில் பேசிய அதிகாரிகள், “இடிக்கப்பட்ட மண்டபத்தை கட்டி கொடுக்கத்தான் இழப்பீடு வழக்கப்பட்டுள்ளது. நிலத்துக்காக இழப்பீடு வழக்கப்படவில்லை.மேலும் மண்டபத்தை கட்டுவது என்பது அரசின் கொள்கை முடிவு. நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து சட்டவிதிமுறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
அப்போது, எங்களுக்கு இடிக்கப்பட்ட மண்டபத்தை கட்டி கொடுத்தால் போதும் என்று பாகூர் முக்கியஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்று உடனே தீர்த்தவாரி மண்டபம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் வல்லவன் உறுதியளித்தார். அதேபோன்று குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிராம முக்கியஸ்தர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உங்களிடம் ஆதாரம் இருப்பதால், ஒரு வாரத்தில் அதனை திருத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு இழப்பீடு தொகையை எப்படி கொடுப்பது என்பது பேசி முடிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனை இரு கிராமத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பொங்கல் பண்டிகை வர இருப்பதால் தீர்த்தவாரி மண்டபத்தை உடனடியாக கட்ட வேண்டும். அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று பாகூர் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பாகூர் மூலநாதர் கோயிலுக்கு தீர்த்தவாரி மண்டபம் கட்ட பாகூர் மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், தீர்த்தவாரி மண்டபம் கட்டாமல் இந்து சமய அறநிலையத் துறை இழுத்தடித்து வருகிறது. எனவே புதுச்சேரி அரசு, இந்து அறநிலையத் துறை உடனடியாக தீர்த்தவாரி மண்டபம் கட்ட தேதி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பாகூரில் ஒரு நாள் பந்த் போராட்டம் நடைபெறும் என்று பொதுமக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று பாகூர் பகுதி முழுவதும் காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பாகூர் பகுதிக்கு புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. அவ்வாறு வந்த பேருந்துகள் பாகூர் கிராமத்தின் எல்லையில் நிறுத்தி திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக பாகூர் பகுதியில் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT