Published : 14 Nov 2023 04:42 PM
Last Updated : 14 Nov 2023 04:42 PM
கடலூர்: பண்ருட்டி வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் வழியாக வாய்க்கால், ஓடை, ஏரிப் பகுதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் காலை நிலவரப்படி கடலூர் நகரப் பகுதியில் 12 சென்டி மீட்டரும், பரங்கிப்பேட்டையில் 11 சென்டி மீட்டரும், சிதம்பரத்தில் 10 சென்டி மீட்டரும் என மாவட்டத்தில் சராரசரியாக 6.9 செ.மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனிடையே, அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலூர் மாவட்டத்தில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்யும் என வானில் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று கடலூர் மேற்கு மாவட்டப் பகுதிகளான பண்ருட்டி வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். முதற்கட்டமாக பண்ருட்டி நகரப் பகுதியில், நகராட்சி ஆணையர், வருவாய் வட்டாட்சியருடன் ஆய்வுசெய்த அமைச்சர், வடிகால் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டதோடு, கனமழை பெய்தால், கெடிலம் ஆற்றுப் பகுதியில் வசிப்போரை தங்கவைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து, பண்ருட்டி வட்டத்துக்குட்பட்ட காட்டுக்கூடலூர், மேல் காங்கேயன்குப்பம், காங்கிருப்பு, மேலிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் கணேசன் மற்றும் நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரனுடன் சென்று, தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொடக் கூடாது எனவும், கால் நடைகளை மின் கம்பங்களில் கட்டவேண்டாம் என்று அறிவுறுத்திய அமைச்சர், மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழல் உருவானால் இப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலரை தொடர்புகொண்டு நிவாரண முகாம்களுக்கு செல்லவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், அதிகாரிகளிடம் இரு தினங்களுக்கு மாவட்டத்தில் முகாமிட்டிருப்பதாகவும், உடனுக்குடன் தகவலை தெரிவித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT