Published : 14 Nov 2023 12:16 PM
Last Updated : 14 Nov 2023 12:16 PM

கோவையில் ‘ஃப்ளூ’ காய்ச்சல் பாதிப்பால் உள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுகாதாரத்துறை சார்பில் கோவை அன்னூரில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்.

கோவை: கோவையில் ‘ஃப்ளூ’ வைரஸ் பாதிப்பு காரணமாக உள்நோயாளி யாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக காய்ச்சல் பாதிப்புக்காக ஒரு நாளைக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 50-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கையானது தற்போது 100 வரை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் சென்று வந்தது ஆகியவை ஃப்ளூ வைரஸ் பரவ காரணங்கள் ஆகும். குழந்தைகள், முதியவர்களுக்கு விரைவாக இந்த வைரஸ் பரவுகிறது.

ஃப்ளூ வைரஸ் பாதித்ததற்கான அறிகுறிகள் மட்டும் இருந்து ஆரோக்கியமாக இருப்பவர்கள், அறிகுறிகளோடு இணைநோய்கள் இருப்பவர்கள், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, ஆக்சிஜன் அளவு குறைவு, ரத்த அழுத்தம் குறைவு உள்ளிட்ட பாதிப்புகளோடு இருப்பவர்கள் என நோயாளிகளை மூன்று வகையாக பிரிக்கிறோம். இதில், மூன்றாவது பிரிவினரை மட்டும் மருத்துவமனைகளில் அனுமதித்தால் போதுமானது. இருப்பினும், இணைநோய்கள் உள்ளவர்களையும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கின்றனர். சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும்போதும், தும்மும்போது மற்றவருக்கு பரவுகிறது.

வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி இருக்கும். இது நீடிக்கும்போது இருமல் வரும். பொதுவாக 7 நாட்களில் இந்த பாதிப்பு தானாகவே சரியாகிவிடும். எனவே, பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று, பரிந்துரைக்கப்படும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

செய்ய வேண்டியவை என்ன? - குடிநீரை வெறுமனே சூடு செய்து பருகக்கூடாது. நன்றாக கொதிக்க வைத்து ஆறிய குடிநீரைத்தான் பருக வேண்டும். அப்போதுதான் கிருமிகள் அழியும். தொண்டையில் கரகரப்பு போன்ற அறிகுறி தெரிந்தவுடன் கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும். ஒருநாளைக்கு 3 முறை இவ்வாறு செய்யலாம். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

வீட்டுக்கு வெளியே சென்று வந்தபிறகு கை, கால்களை சோப்புபோட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும்.வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். உடலுக்கு கட்டாயம் ஓய்வு அளிக்க வேண்டும். மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். இதில், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, சரியாகும் நிலையில் இருந்தால் அங்கேயே மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன. மேல்சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு நோயா ளிகள் பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x