Published : 14 Nov 2023 09:01 AM
Last Updated : 14 Nov 2023 09:01 AM

‘மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்’ - கடலூர், புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை

கடலூர்: கடலூர் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று பள்ளி, கல்லூ ரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பின்படி, டெல்டா மாவட்டமான கடலூர் மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிமின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டும்,

கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077, 04142 - 220700, 04142 – 233933 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இதில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். இன்று (நவ.14) மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கோட்டக்குப்பம் என கடல்சார் மீன்பிடிப் பகுதிகளில் 2,045 சிறுபடகுகளும், 35 விசைப்படகுகளும் பயன்பாட்டில் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்துக்கு வானிலை ஆராய்ச்சி மையத்தால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளதால் மீன வர்கள் கடலுக் குள் செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று லேசாக மழை பெய்த தது. இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையத்தால் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.14) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில், “தமிழகத்தின் கடலோரபகுதிகளில் நேற்றும் இன்றும் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீவேகத்தில் வீசக்கூடும். அதனால் புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்'' என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x