Published : 18 Jan 2018 01:46 PM
Last Updated : 18 Jan 2018 01:46 PM
பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், ஆலைகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும். இத்தொழிலில் நேரடியாகவும், அச்சு, அட்டைப்பெட்டி, காகிதம், அட்டை குழாய்கள் தயாரித்தல், லாரி, சுமைப்பணி உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்தும் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், உற்பத்திக்கான ஆர்டர்கள் கிடைக்காமல் கடந்த டிச. 26-ம் தேதி முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன. தொடர்ந்து 23-வது நாளாக பட்டாசு ஆலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வாரங்களாக வேலையில்லாமல் கடும் சிரமத்தை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிவகாசி கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்படு கின்றன. பட்டாசுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே சமயம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்- 1989 பிரிவு 3-பியில் மற்ற நாடுகளில் உள்ளதைப் போல பட்டாசுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலைகளை அடைத்து உற்பத்தியாளர்கள் நடத்தும் தொடர் போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்காததால், ரயில் மறியல், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க பட்டாசுத் தொழிலாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்ட சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பட்டாசுத் தொழில் பிரச்சினைக்குத் தீர்வுகாண வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டுள்ள பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் இன்று (ஜன.18) திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு பட்டாசுத் தொழில், தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராசா தலைமையில் சென்னை கிழக்குத் தாம்பரத்தில் இன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டதைப் போல பட்டாசுத் தொழிலைக் காக்கவும் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பட்டாசு ஆலை நிர்வாகிகளும், பட்டாசுத் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT