Published : 03 Jan 2018 10:22 AM
Last Updated : 03 Jan 2018 10:22 AM
கா
லண்டர் என்றால் ராகுகாலம், குளிகை காட்டும் என்பதை மாற்றி, வைத்தியம், மூலிகை காட்டும் வித்தியாச காலண்டரை உருவாக்கியிருக்கிறார் சிவகங்கை ஓவியர்.
`அணு’ அஞ்சல் அட்டை அறிவியல் இதழின் 2018-ம் ஆண்டு இணைப்பாக 365 மூலிகைகளுடன் கூடிய புதிய மூலிகை காலண்டரை சிவகங்கையைச் சேர்ந்த ஓவியர் முத்துகிருஷ்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதுமையான காலண்டரில் அனுதினமும் மூலிகைகள், மருத்துவக் குறிப்புகளையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளார்.
சிவகங்கையைச் சேர்ந்தவர் ஓவியர் என்.முத்துகிருஷ்ணன். இவர் அஞ்சல் அட்டையில் ‘அணுவைத் துளைத்தெழு கடலை புகட்டி’ என்ற அறிவியல் சிற்றிதழை நடத்தி வருகிறார். இதில் அறிவியல் கருத்துகள், நகைச்சுவை, விளம்பரம் என அஞ்சல் அட்டையில் உருவாக்கி லிம்கா சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது, 2018-ம் ஆண்டு இணைப்பாக மூலிகைகளுடன் கூடிய காலண்டரைத் தயாரித்து அவரது வாசகர்களுக்கு அனுப்பி வருகிறார்.
இதுகுறித்து ஓவியர் என்.முத்துகிருஷ்ணன், ‘தி இந்து’விடம் கூறியதாவது: கடந்த 1988-ம் ஆண்டு முதல் அஞ்சல் அட்டை யில் அணு சிற்றிதழை நடத்தி வருகிறேன். அணுவைத் துளைத் தெழு கடலைப்புகட்டி என பதிவு செய்துள்ளேன். கடந்த 2004-ம் ஆண்டு முதல் புத்தாண்டுக்கு காலண்டர் இலவசமாக அனுப்பி வருகிறேன். இதில் 15-க்கு 10 அடியில் பெரிய காலண்டர், அரை இஞ்ச் அளவில் காலண்டர், அரச இலையில் காலண்டர் என ஆண்டுதோறும் புதுமையாக வழங்கி வருகிறேன்.
இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரியம், மூலிகைகளைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மூலிகை காலண்டரை உருவாக்கியுள்ளேன்.
தற்போது தொடர்ந்து தும்மினாலே உடனடியாக டாக்டரைப் பார்க்கச் செல்கிறோம். இதனைத் தவிர்க்கவும், மூலிகை மருத்துவம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவும், நம்மைச் சுற்றியுள்ள மூலிகைகளையும் அறிந்து கொள்ளவும் இந்த மூலிகை காலண்டரைத் தயாரித்துள்ளேன். சீரகம், மிளகு போன்ற மூலிகைகள் சமையலில் பயன்படுத்துவதால் தெரிந்து கொள்கிறோம். மற்றவற்றையும் தெரிந்துகொண்டு அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக இந்த நாட்காட்டியை தயாரித்துள் ளேன்.
சித்தர்கள் கண்டறிந்த ஆயிரக்கணக்கான மூலிகைகளில் 365 மூலிகைகளையும் பதப்படுத்தி நாளுக்கு ஒன்றாக காலண்டரில் ஒட்டி, அதில் மூலிகையின் பெயர், நிவர்த்தி செய்யும் நோயின் தன்மை குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
காலண்டரின் பின்புறம் நோயற்ற வாழ்வு வாழ கடைப் பிடிக்க வேண்டிய உணவு முறைகள், பழக்க வழக்கங்கள், பயிற்சி முறைகள், நடைமுறை ஒழுக்கம் போன்றவைகளும் விளக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மூலிகையும் ஒரே மாதத்தில் கிடைப்பதில்லை. ஜனவரியில் கிடைக்கும் மூலிகை ஆகஸ்டில் கிடைக்காது. எனவே அந்தந்த மாதம் கிடைக்கும் மூலிகைகளை அந்தந்த மாதம் தயாரித்து அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT