Published : 12 Nov 2023 04:13 PM
Last Updated : 12 Nov 2023 04:13 PM

"தெளிவு இருந்தால் சண்டைகளும், போராட்டங்களும் இருக்காது” - சத்குரு ஜக்கி வாசுதேவ்

உங்களுக்குள் தெளிவு வந்துவிட்டால் வாழ்வில் தேவையற்ற சண்டைகளும், போராட்டகளும் ஏற்படாது என தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருவிழா. மனித வாழ்வில் வெளிச்சம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், வெளிச்சம் இருந்தால் தான் அனைத்தையும் தெளிவாக பார்க்க முடியும். எனவே, வெளிச்சம் என்பது அனுபவ ரீதியாக தெளிவை குறிக்கிறது.

நம் மனதிலும், வாழ்க்கையிலும் தெளிவை கொண்டு வந்துவிட்டால் நம்முடைய உயிர் ஒரு உயர்ந்த உயிராக வாழும். நாம் ஜாதி, மதம், மொழி என பல விதமான அடையாளங்களை எடுத்துள்ளோம். நாம் பிறக்கும் போது இந்த அடையாளங்களுடன் பிறக்கவில்லை. இறக்கும் போதும் இந்த அடையாளங்களை எடுத்து செல்ல முடியாது. நமக்குள் தெளிவு என்பது வந்துவிட்டால் உயிர் ஒரு மகத்தான நிகழ்ச்சி என்பது புரிய வரும்.

உலகம் முழுவதும் இந்த உயிர் நடக்கிறது. அதில் நாமும் ஒரு உயிர். உலகில் உள்ள கோடிக்கணக்கான உயிர்களில் நாம் ஒரு பூ மாதிரி. அந்த பூவிற்கு ஒரு நறுமணம் இருக்க வேண்டும். இதற்கு பதிலாக கோபம், வெறுப்பு, பொறாமை எல்லாம் இருக்க கூடாது. தெளிவு இல்லாததால் தான் இவை எல்லாம் நம்மிடம் உள்ளன. தெளிவு வந்துவிட்டால் தேவையற்ற சண்டைகளும், போராட்டங்களும் இல்லாமல் ஆகிவிடும்.

இது நமக்கான நேரம். நாம் வாழும் நேரம். இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது நம் கையில் தான் உள்ளது. எனவே, உலகில் உள்ள எல்லோரும் ஆனந்தமான ஆரோக்கியமான, முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டும். அதை நிகழ்த்தி காட்ட வேண்டும் என்ற உறுதியை நாம் இந்த தீபாவளி நாளில் எடுத்து கொள்ள வேண்டும். உங்களுக்குள் தெளிவை கொண்டு வருவதற்கு பல விதமான யோக க்ரியைகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி உங்கள் வாழ்வில் தெளிவை கொண்டு வாருங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x