Published : 12 Nov 2023 06:03 AM
Last Updated : 12 Nov 2023 06:03 AM

பள்ளிக்கல்வி பணியாளர் விதியில் முரண்பாடு: தலைமை ஆசிரியர்களை பணியிறக்க முடிவு

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் என 3 விதமான நிலைகளில் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என 2 வகையான பதவி உயர்வுகள் வழங்கப்படும்.

அவ்வாறு முதுநிலை பள்ளிஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் பட்டதாரி ஆசிரியர்கள்அடுத்த பதவி உயர்வை பெற சில ஆண்டுகள் தாமதமாகும். இதைதவிர்க்க ஆசிரியர்கள் தங்களின்பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர்.

இந்த முறையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் 2016 ஜனவரி 1-ம் தேதிக்கு பின் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களின் நியமனம் செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சுமார் 1,040 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட உள்ளனர். அவர்களில் கணிசமானவர்களை வட்டார வள மைய கண்காணிப்பாளர்களாக நியமிப்பதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர் பணியில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை துரிதமாக அனுப்ப வேண்டும். இவர்களில் எவரேனும் அடுத்தநிலை பதவி உயர்வு பெற்றிருந்தாலோ அல்லது ஓய்வு மற்றும்இறப்பு போன்ற நிகழ்வுகள் இருப்பின் அதன் விவரம் குறிப்பிடப்பட வேண்டும். இதில் எவரது பெயரேனும் விடுபட்டதாக தெரியவந்தால் சார்ந்த பணியாளர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x