Published : 26 Jan 2018 06:28 PM
Last Updated : 26 Jan 2018 06:28 PM
ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தை முழுமையாகப் பார்வையாளர்கள் பார்வையிட குடியரசு தினத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவி காலத்திற்கு பின்னர் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் கடந்த 27.07.2015 அன்று மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் 'அப்துல் கலாம் தேசிய நினைவகம்' அமைக்கப்பட்டு கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான கடந்த ஜூலை 27-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
கலாம் நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தபடி அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு காட்சிக் கூடங்கள் மட்டும் முழுமையாக பணிகள் முடியாத நிலையில் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் 69-வது குடியரசு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கலாமின் மூத்த சகோதர் முத்துமீரா மரைக்காயர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் மற்றும் கலாமின் உறவினர்கள் உறவினர்கள் முன்னிலை வகித்தனர்.
நான்கு காட்சிக் கூடங்களுக்குள்ளும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததால் குடியரசு தினக் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் பொது மக்கள் கலாம் நினைவகத்தை முழுமையாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நான்கு காட்சிக் கூடத்தில் கலாமின் மாணவ பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராக பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கலாம் நினைவகத்தைப் பார்வையிட வந்த நவி மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரன்வீர் கூறுகையில், ''வாழ்நாளில் ஒருமுறை கலாம் நினைவகத்தை பார்க்க வரும் என்னைப் போன்ற பலர் இங்குள்ள கலாம் சிலைகளுடன் புகைப்படமாகவோ, விடியோவாகவோ எடுக்க விரும்புவார்கள். இதனால் கலாம் நினைவகத்துக்குள் செல்போன், காமிராக்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.மேலும் பார்வையாளர்கள் நேரத்தை மாலை 7 வரையிலும் நீட்டிக்க வேண்டும். அல்லது விடுமுறை நாட்களிலாவது பார்வையாளர்கள் நேரத்தை கூட்ட வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT