Published : 11 Nov 2023 04:24 PM
Last Updated : 11 Nov 2023 04:24 PM
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி ‘கருக்கா’ வினோத் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் கடந்த மாதம் 25-ம் தேதி மதியம் 3 மணியளவில் அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கிண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கருக்கா வினோத் போலீஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த விசாரணையில் அவர், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகதான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன். ‘நீட்’ தேர்வால் மாணவ - மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் தொடர் கதையானதால் மன உளைச்சல் அடைந்தேன். எனது மகன் 6-ம் வகுப்பு படிக்கிறான். நீட்’ தேர்வு இருந்தால் அவன் எப்படி டாக்டர் ஆவான்? எனவேதான் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் பாஜக அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன். தற்போது ஆளுநர் மாளிகை முன் வீசி உள்ளேன் ’என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பிணையில் வெளிவர இயலாத சூழல் உருவாகியுள்ளது, முன்னதாக, பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கமான குற்றவாளி என்று காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் மீது இந்த வழக்கையும் சேர்த்து 14 வழக்குகள் உள்ளன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாம்பலம் போலீஸார் சமீபத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான சென்னை மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி. தேவராஜன், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தபிறகும் கருக்கா வினோத் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு கருக்கா வினோத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.15-ம் தேதிக்கு தள்ளி வைத்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT