Published : 11 Nov 2023 03:54 PM
Last Updated : 11 Nov 2023 03:54 PM
சென்னை: மடிப்பாக்கம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள காலிமனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் அச்சத்தில் அப் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம் ராம்நகர், சதாசிவம் நகர், புழுதிவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. மிக வேகமாக வளர்ந்து வரும் இப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் முக்கிய பகுதி என்பதால் பலர் இங்கு காலி மனைகளை வாங்கி வைத்துள்ளனர். அவற்றை சம்பந்தபட்ட உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காததால் காலி மனைகள் புதர் மண்டி காணப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மழைக்கும் வெள்ளநீர் தேங்கி அவை சாக்கடையாக மாறுவது வழக்கமாகி வருகிறது.
இதுதவிர மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை வசதிகள் இன்னும் முழுமை பெறாததால் அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காலிமனைகளில் விடப்படுகிறது. மழைக் காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தொற்றுநோய் அச்சத்திலும் அந்த இடங்களில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர். காலி மனைகளில் நீர் தேங்காத வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மடிப்பாக்கம், பல்லாவரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கூறியதாவது:
குட்டைகளாகும் காலிமனைகள்: கணேசன், பந்தல் கடை உரிமையாளர்: மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதி தாழ்வானதாக இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த இடத்தில் நீர் தேங்குகிறது. அதை சுற்றியுள்ள கடைகளின் உரிமையாளர்கள் கழிவுநீரை அதில் விடுகின்றனர். இதனால் மழைநீர் சாக்கடையாக மாறி சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுகின்றன. மேலும், காலி மனைகளில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால் தொடர் மழைக்கு முன் அதிகாரிகள் துரித நடடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்நாதன், ஐடி ஊழியர்: ராம்நகர். சதாசிவம் நகர் பகுதி தாழ்வாக உள்ளதால் மழைக் காலங்களில் அதிக நாட்கள் தண்ணீர் தேங்குகிறது.
மழைநீர் தேக்கம், உப்பு கலந்த நிலத்தடி நீர், குடிநீர் வசதி இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களால் இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு நூற்றுக்கணக்கான காலி மனைகள் உள்ளன. மழைக் காலங்களில் அவையெல்லாம் குட்டைபோல் காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட வேண்டியுள்ளது. இதுதவிர கழிவுநீரால் காலி மனைகளில்விஷ பூச்சிகள் அச்சமும் நிலவுகிறது. சுகாதாரத் துறையினர் ஆய்வுக்கு வரும்போது காலிமனைகளில் கழிவுநீர் தேங்குவதை கண்டும் காணாமல் போய்விடுகின்றனர். அதேபோல், சாலை போடுவதில் கவனம் செலுத்தும் மாநகராட்சி சுகாதார நடவடிக்கையில் மெத்தனமாக இருக்கிறது. கொசு உற்பத்தி மற்றும் தொற்றுநோய் பரவுவதை தடுக்க காலிமனைகளில் தேங்கும் கழிவுநீரை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமையாளர்களுக்கு உத்தரவு.. வைரப்பிரகாசம், பொறியாளர்: பல்லாவரம் 18-வது வார்டில் அமைந்துள்ள பிருந்தாவன் நகரில் காலிமனைகளில் தண்ணீர் தேங்கி அதனுடன் கழிவு நீர் கலக்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக, காலிமனை உரிமையாளர்கள், தங்கள் மனையை சுத்தமாக பராமரிக்க, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மனை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை பலர் முறையாக பின்பற்றுவதில்லை. எனவே, புகார்கள் கிடைக்கப் பெற்ற பகுதிகளில் முதலில் சுகாதார முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இதர காலி மனைகளையும் கண்டறிந்து மழைநீர் தேங்காதவாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்தப் பகுதிகளில் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT