Published : 11 Nov 2023 05:59 AM
Last Updated : 11 Nov 2023 05:59 AM

2024-ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: அடுத்த 2024-ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறைநாட்கள் தவிர, இதர பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில், அடுத்த 2024-ம்ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்புஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் 2024-ம் ஆண்டின் அனைத்து சனிமற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர,24 நாட்களும் பொது விடுமுறைநாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் முதலியவற்றுக்கு பொருந்தும்.

விடுமுறையை பொறுத்தவரை, இந்த ஆண்டில் பிப்ரவரி, நவம்பர்மாதங்களில் பொதுவான சனி,ஞாயிறு விடுமுறை நாட்களைத் தவிர வேறு அரசு விடுமுறை என்பது இல்லை. ஆங்கில புத்தாண்டு,பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி, மிலாதுன்நபி ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

இதுதவிர, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் ஆகியவை திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்ந்து 5 நாள் தொடர் விடுமுறை அமையும். அதேபோல், தைப்பூசம், குடியரசுதினம் ஆகியவை வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வருவதால் அடுத்துவரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது.

அடுத்தாண்டு தீபாவளி வியாழக்கிழமையில் வருவதால், வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாக அமையும். மேலும் இந்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி ஆகியவை சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x