Published : 11 Nov 2023 04:54 AM
Last Updated : 11 Nov 2023 04:54 AM

‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற பெயரில் யாத்திரை: 15-ல் பிரதமர் தொடங்கி வைப்பதாக எல்.முருகன் தகவல்

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்வதற்காக வரும் 15-ம் தேதி, ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற பெயரில் யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாஸ்திரி பவனில் இயங்கிவந்த மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், பத்திரிகை பதிவு அலுவலகம் ஆகியவை தற்போது சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகம் அருகே மாற்றப்பட்டுள்ளது.

‘தகவல் மாளிகை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அலுவலகங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினம் ஜன்ஜாதிய கவுர தினமாக நவ.15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது, பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் தினமாக, இத்தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற பெயரில் யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடியின் கடந்த ஒன்பதரை ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச்சென்று விளக்குவதே இந்த யாத்திரையின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் 2.5 லட்சம் கிராமங்களிலும், 18 ஆயிரம் நகர்ப்புறங்களிலும் இந்த யாத்திரை செல்ல உள்ளது. தமிழகத்தில் 12,500 ஆயிரம் கிராமங்கள், 1,455 நகர்ப்புறங்களில் இந்த யாத்திரை செல்ல உள்ளது. ஜன.20 வரை இந்த யாத்திரை நடைபெறும்.

தமிழகத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் சேலம் மாவட்டத்தில் 135 கிராமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 103 கிராமங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 11 கிராமங்களில் நவ.15 அன்று இந்த யாத்திரை தொடங்கப்படுகிறது.

தூர்தர்ஷன் பொதிகை சேனல் வரும் ஜன.14-ம் தேதி முதல் ‘தூர்தர்ஷன் தமிழ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறு அறிமுகம் செய்யப்படுகிறது.

மத்திய அரசு திட்டங்களை வகுக்கிறது. அவற்றை செயல்படுத்த வேண்டியவை மாநில அரசுகள்தான். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு எவ்வாறு செயல்படுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஊழலுக்கு பெயர் போன அரசாக தமிழக அரசு உள்ளது. எனவே, மத்திய திட்டங்களை முறையாக செயல்டுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாககக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை விரைவில் நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 8 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டும் மீனவர்களைக் கண்காணிப்பதற்காக விரைவில் ஒரு லட்சம் மீனவர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் கருவி வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x