Published : 10 Nov 2023 03:26 PM
Last Updated : 10 Nov 2023 03:26 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய அமைச்சர் விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். அனைவரும் அனைத்து வளமும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ வாழ்த்துகள். புதுவை மாநில மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ எமது அரசு சார்பில் நல்வாழ்த்துக்கள். புதுவை அரசு மக்களுடைய அரசு. மக்கள் நலனுக்காக பாடுபடும் அரசு. மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்துகிறோம்.
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் பல புதிய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி, சிலிண்டருக்கு மானியம், விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு லேப்டாப் விரைவில் வழங்கப்படும். உள் கட்டமைப்பை மேம்படுத்தும் அனைத்து பணிகளும் பொதுப் பணித்துறை, உள்ளாட்சித் துறை மூலம் நடந்து வருகிறது. மேம்பாலங்கள், தார் சாலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அனைத்து சமுதாய மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் காலத்தோடு வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக நர்சிங் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. காரைக்காலில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தாழ்த்தப்பட்டோர், மீனவர்கள், பிற்படுத்தப்பட்டோர், கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் உரிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை ஈர்க்கும் வகையிலும் திட்டங்களை கொண்டுவர அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆன்மிகம், கல்வி, மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர அரசு செயல்பட்டு வருகிறது. புதுவை மக்கள் மகிழ்ச்சியோடு வாழும் நிலையில் மாநில மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
புதுவையில் புதிய அமைச்சர் விரைவில் நியமிக்கப்படுவார். புதுவை மருத்துவ கல்லூரிகளில் எப்படி மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வெளிப்படைத் தன்மையோடு சென்டாக் மூலம் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். முதல்வரும் தலைமைச் செயலரும் இணக்கமாக செயல்படுவது தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ளதை பற்றி கேட்கிறீர்கள். புதுவை மாநில வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதனடிப்படையில் அனைவரும் செயல்பட வேண்டும். புதுவைக்கு புதிய சட்டமன்றம் அவசியம். கட்டுவோம். அதிகாரிகள் விரைவாக செயல்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இது தொடர்பாக சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ-க்கள் பேசியுள்ளனர். புதுவை அரசின் நிலை என்ன என அனைவரும் அறிந்தது. இந்த நிலை மாற வேண்டும் என்பதே அரசின் எண்ணம்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT