Published : 10 Nov 2023 03:06 PM
Last Updated : 10 Nov 2023 03:06 PM

“அனகாபுத்தூரில் 3 தலைமுறை குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவது மனிதமற்ற செயல்” - தினகரன்

சென்னை: “அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்துக்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்துக்குரியது. 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு ஆகிய பகுதிகள் ஊராட்சி, நகராட்சி பட்டியலில் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு எனக் கூறி அவர்களை வெளியேற்ற முயற்சிப்பது மனிதநேயமற்ற செயலாகும்.

நீதிமன்றத்தில் தகுந்த மேல்முறையீடு செய்து அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகள் நீர்வழித்தடம் மற்றும் நீர் தேங்கும் பகுதி இல்லை என்பதை தெளிவாக விளக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான தீர்ப்பை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களை வெளியேற்றுவதை நிறுத்தி, அங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்குவதோடு, வீடுகளை இழந்த ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அரசு சார்பிலே புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x