Published : 10 Nov 2023 05:12 AM
Last Updated : 10 Nov 2023 05:12 AM
சென்னை: தமிழகத்தில் மோட்டார் வாகன வரி உயர்வு நேற்று அமலுக்கு வந்தது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் நிறைவு நாளில், அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரியை உயர்த்துவதற்கு வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ரூ.1 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவீதம் எனவும், ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான விலைக்கு வாங்கப்படும் வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும் வாழ்நாள் வரி மாற்றியமைக்கப்பட்டது.
பழைய இருசக்கர வாகனங்களில் ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25 சதவீதம் (ரூ.1 லட்சத்துக்கு மிகாமல்) மற்றும் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக இருப்பவைகளுக்கு 10.25 சதவீதம்; 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பழையதாக உள்ளதற்கு (ரூ.1 லட்சத்துக்கு மிகாமல்) 8 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்டவற்றுக்கு 10 சதவீதம் என வாழ்நாள் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கார்களை பொருத்தவரை ரூ.10 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 10 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான விலைக்கு வாங்கப்படும் வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி வசூலிக்கப்பட்டது. இதை மாற்றியமைத்து ரூ.5 லட்சம் வரையிலான கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமான கார்களுக்கு 20 சதவீதமும் என நிர்ணயிக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் கடந்த 6-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதற்கான உத்தரவு 7-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் வரி உயர்வு அமலுக்கு வந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘‘வரி உயர்வு மூலம் இருசக்கர வாகன விலையில் 5 சதவீதம் வரை அதிகரிக்கும். குறைந்த திறன் கொண்ட வாகனம் வாங்குவோருக்கு ஜிஎஸ்டி சேர்த்துரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். கார், கனரகவாகனங்கள், சுற்றுலா வாகனங்களின் வரிக்கு ஏற்ப விலை அதிகரிக்கப்பட்டுள்ளது’’ என்று வாகன விற்பனையாளர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT