Published : 10 Nov 2023 05:18 AM
Last Updated : 10 Nov 2023 05:18 AM
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து விண்ணப்பித்திருந்த நிலையில், 7 லட்சம் பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.15-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டது.
இதற்கிடையே, தகுதி இருந்தும் திட்டத்தில் சேர்க்கப்படாதவர்கள், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த வாரம் வரை 11.85 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் கண்டறியப்பட்டனர். இதுதொடர்பாக அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அவர்களது வங்கிக் கணக்குக்கு ரூ.1 அனுப்பி உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், ஓய்வுக்கு பிறகு, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகையை வழங்கி, இப்பணியை தொடங்கி வைக்கிறார்.
இதற்கிடையே, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘கலைஞர் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதில் புதிதாக 7 லட்சம் மகளிர் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது இத்திட்டத்தில் மொத்தமாக 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன்பெறுகின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT