Published : 22 Jan 2018 12:37 PM
Last Updated : 22 Jan 2018 12:37 PM
சிவகாசியில் கடந்த 27 நாளாக நடைபெற்று வந்த முழு அடைப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்படுகின்றன. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையின்போது பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுமோ என்கிற அச்சத்தால் பட்டாசுக்கான ஆர்டர்களை வட மாநில பட்டாசு விற்பனையாளர்கள் நிறுத்தி உள்ளனர்.
இதனாலும், இச்சூழ்நிலையை எவ்வாறு கையாளுவது எனப் புரியாததாலும் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சிவகாசி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆலைகளின் தொடர் அடைப்பு காரணமாக பட்டாசுத் தொழிலாளர்களும் வேலையின்றி தவித்தனர்.
மற்ற நாடுகளில் உள்ளதைப்போல சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 3பி-யில் பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அவ்வாறு சட்ட திருத்தம் கொண்டுவந்தால் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லை என்றும், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதால் இக்கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருதி சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலர் பட்டாசு ஆலைகளை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திறந்தனர்.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.22) நடக்க இருந்த பட்டாசு தொடர்பான வழக்கு விசாரணை திடீரென மே 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது உற்பத்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, அரசு முதன்மைச் செயலர் உள்ளிட்டோரை பட்டாசு உற்பத்தியாளர்கள் சந்தித்து தங்கள் நிலையை விளக்கினர். இதையடுத்து பட்டாசு உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் அனைத்து பட்டாசு ஆலைகளை ஜன.22 (இன்று) முதல் திறப்பதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், அனைத்து பட்டாசு ஆலைகளும் இன்று திறக்கப்படுவதால் பட்டாசுத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT