Published : 09 Nov 2023 11:57 PM
Last Updated : 09 Nov 2023 11:57 PM

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகளில் 78 புதிய சாலைகள் அமைக்க அரசு அனுமதி: அமைச்சர் பி.மூர்த்தி

அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை: “கிழக்கு தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகளில் 78 புதிய சாலைகள் அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 மாநகராட்சி வார்டுகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ‘‘பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரமான இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதில் திமுக அரசு கவனமாக உள்ளது.

அந்த வகையில் பொதுமக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு இந்த அரசும், மக்கள் பிரதிநிதிகளும் செயல்பட்டு வருகிறார்கள். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு 14 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காக நடத்தப்படும் 2-வது குறை தீர்க்கும் கூட்டமாகும். இப்பகுதிகளில் ரூபாய் 1 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் 78 சாலைகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள 200 கி.மீ தொலைவிற்கான பாதாள சாக்கடை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்படும். மேலமடை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய சாலை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் உள்ள 7 கண்மாய்களில் கரைகளை மேம்படுத்தி நடைபாதையாக அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகளும் நிறைவேற்றப்படும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இப்பகுதிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைத்திட பொதுமக்களுடன் ஒன்றிணைந்து போராடினேன். எப்போதும், எதற்காகவும் உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் பணி செய்வதை பெருமையாக கருதுகிறேன்" என்றார்.

இக்கூட்டத்தில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 154 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என மேயர், மண்டலத்தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர் வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x