Published : 09 Nov 2023 05:10 PM
Last Updated : 09 Nov 2023 05:10 PM
விழுப்புரம்: “பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு, அடித்தளத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமேயாகும். ஆகவே, அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் இன்று நடைபெற்ற கலைஞரின் கவிதைகள், திரைப்பட, நாடக வசனங்கள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் கூறியது: ''பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியானதற்கு காரணமே பெரியார்தான். தமிழகத்தில் ஆணும் பெண்ணும் சமம், அனைவரும் படிப்பதற்கு பெரியார்தான் காரணம். வடமாநிலத்தவரும் பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளார். தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற நப்பாசையில் அவர் பேசிவருகிறார். பெரியார், அண்ணா, கலைஞர் , காமராஜர் போன்றவர்கள் அடிதட்டு மக்களுக்காக, பெண்ணுரிமைக்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது அவருக்கே நன்கு தெரியும். பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு, அடித்தளத்து மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கமேயாகும். ஆகவே, அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.
பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை செயலாளர் பெயர்கூட அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அவருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. புதுச்சேரி முன்னாள் ஆளுனர் கிரண்பேடி பட்டமளிப்பு விழாவில் ஆளுநரோ, துணை வேந்தரோ பேசவில்லை என்று கூறியுள்ளார். உங்களுடன் உள்ள ஐபிஎஸ் அதிகாரியே பேசியுள்ளார். முன்பெல்லாம் எங்களுக்கு முறையாக அழைப்பு அனுப்பப்பட்டு, பேச அனுமதிக்கப்பட்டது. இப்போது அனுமதிக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஆளுநர்தான் மட்டும்தான் பேசவேண்டும் என்ற எண்ணம்தான்.
நாம் பெரியார், திராவிட சிந்தனைகளை மாணவர்களுக்கு எடுத்து சொல்ல வாய்ப்பு அளித்து 5 நிமிடம் அனுமதி அளிக்கவேண்டும். ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவிலும் எங்களையும், உயர் கல்வி செயலாளரையும் அழைத்து பேச அனுமதிக்கவேண்டும். மேடையில் அவருக்கு இருக்கைகூட ஒதுக்கப்படவில்லை. இனி பட்டமளிப்பு விழாவை துணை வேந்தரான நீங்கள் நடத்துங்கள் என்று சொல்லும் அளவுக்கு இனி ஆளுநர் நடந்துகொள்ளமாட்டார் என நம்புகிறேன்” என்று அவர் பேசினார். அப்போது விக்கிரவாண்டி எம் எல் ஏ புகழேந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT