Published : 09 Nov 2023 03:49 PM
Last Updated : 09 Nov 2023 03:49 PM
சென்னை: "பாஜகவைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சமமாக இருக்கும் கட்சி. பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை, ஒரு மசூதி அல்லது தேவாலயத்துக்கு வெளியே வைக்க இந்த அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பாஜக எங்கேயும் பெரியாரை அவமதிக்கவில்லை. பெரியார் எங்கு இருக்க வேண்டுமோ, அவருக்கு என்ன கவுரவம் கொடுக்க வேண்டுமோ அதை கொடுப்போம். அதேநேரத்தில், கோயிலுக்கு வெளியே, கடவுளை நம்பக்கூடிய மனிதர்கள் கோயிலுக்கு செல்லும் வழியில், கோயிலின் கோபுரத்திலிருந்து நூறு மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்ற வேண்டும் என்பது மக்களின் கருத்தும். அதனை பாஜக தைரியமாக வெளிப்படுத்துகிறோம். இதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரியாரை யாரும் தரக்குறைவாக பேசவில்லை. அவரை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. பொது இடங்களில் அவரது சிலைக்க இருக்க வேண்டும். பெரியார் சொல்லக்கூடிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் யார் இருக்கிறார்களோ, அங்கு இருக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியே பெரியார் சிலை இருக்கக் கூடாது என்பதைதான் பாஜக ஒரு பிரகடனமாக கூறியிருக்கிறோம். எனவே, இதை மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேநேரத்தில், அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். பாஜகவைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சமமாக இருக்கும் கட்சி. இதுபோன்ற வாசகங்கள் அடங்கிய சிலையை, ஒரு மசூதிக்கு வெளியே வைக்க இந்த அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா? இன்று யாரெல்லாம் எங்களுக்கு எதிர்க் கருத்துகள் கூறுகிறார்களோ, ஒரு தேவாலயத்துக்கு வெளியே வைக்க ஒப்புக்கொள்வார்களா? இதுதான் எங்களது கேள்வி.
பெரியார் எங்கு இருக்க வேண்டுமோ, உயரிய கவுரவத்துடன் அவரை அங்கு வைக்கலாம். கோயிலுக்கு வெளியே வேண்டாம் என்ற மக்களின் கருத்தை நாங்கள் பிரதிபலிக்கிறோம். அதை எங்களுடைய தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் வைக்கிறோம். இதில், அரசியல் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும். அவ்வாறு அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், பெரியார் ஒவ்வொரு அரசியல் குறித்து தெரிவித்த வாசகங்களை அந்தந்த அரசியல் கட்சிகளின் வாசலில் வைக்க வேண்டும்” என்றார்.
அப்போது தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்துசமய அறநிலையத் துறை கலைக்கப்படும் என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்காது என்று கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜகவின் நிலைப்பாடு இந்து அறநிலையத் துறை இருக்கக் கூடாது. அதை பாஜக செயல்படுத்தும். இந்த நிலைப்பாட்டை மக்கள் முன்பாக நாங்கள் வைக்கிறோம். தேர்தலில் பாஜகவுக்கு நீங்கள் ஆதரவளித்து, மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வரும்போது இதை செய்வோம் என்றுதான் கூறுகிறோம்.
இந்து சமய அறநிலையத் துறை குறித்து பாஜக ஏன் தொடர்ச்சியாக பல விமர்சனங்களை வைக்கிறோம். உதாரணத்துக்கு, அமைச்சர் சேகர்பாபு உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறார். அதில், திமுக ஆட்சிக்கு வந்தபின்பு, ரூ.5,534 கோடி கோயில் சொத்துகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பிரமாணப் பத்திரத்தில் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இந்துத்துவா சக்திகளிடமிருந்து ரூ.162 கோடி மதிப்பிலான சொத்துகளை மீட்டுள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்துத்துவா சக்தி என்று பாஜக மற்றும் இந்து முன்னணி என்ற இரண்டு பெயர்களை அவர் பயன்படுத்தியுள்ளார்.
அதாவது, மொத்தமாக மீட்கப்பட்ட சொத்தில் 3 சதவீத மதிப்பு இந்துத்துவா சக்திகளிடமிருந்து மீட்டுள்ளதாக கூறியுள்ளார். அப்போது அந்த 97 சதவீத சொத்துகள் என்ன? இது தொடர்பாக எந்த கருத்தும் வெளியிடவில்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ் என யார் ஆக்கிரமித்திருந்தாலும் அவர்களது பெயரை வெளியிட முடியுமா? கட்சி சார்பு இல்லாத நபர்கள் ஆக்கிரமித்திருந்தால் அவர்களது பெயரை வெளியிட முடியுமா என்று இந்த அரசுக்கு நான் சவால் விடுகிறேன்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT