Published : 09 Nov 2023 04:45 PM
Last Updated : 09 Nov 2023 04:45 PM
புதுச்சேரி: "புதுச்சேரியில் விபத்து நடந்த மருந்து ஆலைக்கு தமிழக அரசுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. படுகாயமடைந்த தொழிலாளர்களில் ஒருவர் குழந்தை தொழிலாளர்" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "புதுவை காலாப்பட்டில் உள்ள மருந்து தொழிற்சாலையில் கடந்த 4ம் தேதி பாய்லர் வெடித்து விபத்தில் 14 தொழிலாளர்கள் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். மிகப்பெரிய விபத்து இது. படுகாயமடைந்த தொழிலாளர்களில் ஒருவர் குழந்தைத் தொழிலாளர் ஆவார். புதுவையின் பாதுகாவலர் என கூறும் முதல்வர் ரங்கசாமி இதைப்பற்றி எதுவும் பேசாமல் மவுனமாக உள்ளார்.
ஆனால் ஆளுநர் தமிழிசை, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பதில் கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. பாஜக மாநில தலைவர் செல்வகணபதி உட்பட பாஜகவினர், நாங்கள் அனுமதி அளித்ததாக பொய் புகார் கூறிவருகின்றனர். இதை பாஜகவால் நிரூபிக்க முடியுமா?. மருந்து தொழிற்சாலையில் பாதுகாப்பு வசதிகளை தொழிலாளர் துறையும், மாசு கட்டுப்பாட்டுத்துறையும் ஆய்வு செய்யவில்லை. இதனால்தான் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையை பொறுத்தவரை அங்கு காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தொழிற்சாலை நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு, அனைத்து தொழிற்சங்கத்தையும் கையில் வைத்துக்கொண்டு அவர் சர்வாதிகார போக்கோடு செயல்பட்டுவருகிறார். அவர் ராகுல் காந்தி பெயரிலான தொழிற்சங்கத்துக்கு சிறப்பு தலைவராக உள்ளார்.
தொழிற்சாலைக்கு வெளியிலிருந்து குடிநீர் வருகிறது. புதுவையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கக்கூடாது என தடை உத்தரவு உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தொழிற்சாலையில் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழக அரசுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் 95 சதவீத முறைகேடுகள் நடக்கிறது. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பித்தபோது, குடியிருப்புகள் இல்லை. தற்போது குடியிருப்புகள் வந்ததால் பாதிப்பு என தெரிந்ததும் மூடிவிட்டனர்.
காலாப்பட்டு தொகுதிமக்கள் ஆலையை மூட வேண்டும் என்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ஆலையை மூட வேண்டும் என நாங்கள் தெரிவித்தோம். ஆலையை மூடுவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT