Published : 09 Nov 2023 12:55 PM
Last Updated : 09 Nov 2023 12:55 PM
சென்னை: "மூத்த புகைப்படப் பத்திரிகையாளரும், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞருமான சு. குமரேசனின், திடீர் மறைவு புகைப்பட இதழியல் உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த புகைப்படப் பத்திரிகையாளர், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் சு. குமரேசன் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன்.
திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதரின் பெயரனான குமரேசன், விகடன் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கடந்த வாரம்தான் பூர்வீகக் குடிகளின் பாவலர் முருகேச பாகவதர் படைப்பு நூலுக்கு எனது வாழ்த்துச் செய்தியை பெற்றுச் சென்றார்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்று பக்கங்கள் பலவற்றை தனது புகைப்படக் கருவியின் வாயிலாகப் பதிவு செய்தவர். மறைந்த முதல்வர் கருணாநிதி, நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பதிவு செய்தவர். குமரேசனின் திடீர் மறைவு புகைப்பட இதழியல் உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்லையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மூத்த புகைப்படப் பத்திரிகையாளரும், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞருமான சு. குமரேசன் நேற்றிரவு (நவ.08) மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 58.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT