Published : 09 Nov 2023 05:16 AM
Last Updated : 09 Nov 2023 05:16 AM

தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் இன்று முதல் 'தீபாவளி' சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோப்புப்படம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மறுநாள் 13-ம் தேதி கேதார கவுரி விரதம் என்பதால், அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பலதரப்பிலும் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில், தீபாவளிக்காக சொந்த ஊர்செல்பவர்கள் ஊர் திரும்ப வசதியாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறைஅலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 13-ம் தேதியும் அரசு விடுமுறை அளித்துள்ளது.

இதற்கிடையே, தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக தமிழகம் முழுவதும் 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்துதினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, இன்று முதல் 11-ம் தேதி வரை சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கபோக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரபோக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர்,சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி,வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்,ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி,பெருங்களூரு அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல, மதுரை, திருச்சி, கோவை உட்பட அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x