Published : 09 Nov 2023 05:04 AM
Last Updated : 09 Nov 2023 05:04 AM

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் | 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் சென்னையில் இன்று ஆலோசனை

கோப்புப் படம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் தொடங்கியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிச.3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் 5 மாநில தேர்தல் பணிகள் இருந்தாலும், தேர்தல் நடைபெறாத மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிந்ததும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த சூழலில், மண்டல வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.

மேலும், இக்கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறும்போது,” நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தற்போதைய தயார் நிலை குறித்த ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்தல் தேதியை முடிவு செய்யும் முன் பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசு விடுமுறை, மாவட்ட உள்ளூர் விடுமுறைகள், பண்டிகை, விழாக்கள், பள்ளி, கல்லூரி தேர்வுகள், போட்டித்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் கேட்கப்படும். நாங்கள் அந்த விவரங்களை அளித்ததும், அவற்றை கணக்கிட்டு தேர்தல் தேதியை ஆணையம் முடிவு செய்யும்.

இன்று நடைபெறும் மண்டல கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதுதவிர, மாநிலங்களில் தேர்தல் பணிக்கென பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு காவல் அதிகாரிகள், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x