Published : 28 Apr 2014 07:44 AM
Last Updated : 28 Apr 2014 07:44 AM
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் இன்று பதவியேற்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நடந்தது. இதில் அதிமுக சார்பில் எஸ்.முத்துக்கருப்பன், கே.செல்வராஜ், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் மற்றும் அதிமுக ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், திமுக தரப்பில் திருச்சி சிவா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி, டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மற்றும் திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை. இதுபற்றி டி.கே.ரங்கராஜனிடம் கேட்டபோது, “எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், வேறொரு நாளில் பதவியேற்க உள்ளேன்” என்றார்.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், “பதவியேற்புக்கு ஏப்ரல் மாதத்தில் 3 தேதிகளை குறிப்பிட்டு சொல்லியிருந்தார்கள். எனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் அந்த தேதிகளில் பதவியேற்க முடியவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜூன் மாதம், நாடாளுமன்றம் கூடும்போது பதவியேற்றுக் கொள்வேன். இப்போதைக்கு அவசரம் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT