Last Updated : 09 Nov, 2023 06:17 AM

 

Published : 09 Nov 2023 06:17 AM
Last Updated : 09 Nov 2023 06:17 AM

சமூக வலைதளத்தில் வீடியோ பதிவேற்றும் மோகத்தில் அஜாக்கிரதையாக பட்டாசு வெடிக்க கூடாது: மக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போலீஸார் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), ஆஸ்ரா கர்க் (வடக்கு) ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மக்கள் அதிகளவில் கூடும் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ், டெலிகிராம் என சமூக வலைதளத்தில் பதிவேற்றும் மோகத்தில், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தாங்கள் பட்டாசு வெடிப்பதை காண்பிக்கும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக பட்டாசுகளை அஜாக்கிரதையாக யாரும் வெடிக்க வேண்டாம். இது உடலுக்கு மட்டும் அல்ல உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, சட்ட விதிகளை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கனரக வாகனங்களுக்கு தடை: போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் கூறும்போது, “மக்கள் அதிக எண்ணிக்கையில் வெளியூருக்கு செல்வதையொட்டி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்துத் துறையுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.

சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு தினமும் வழக்கமாக 4 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்காக கூடுதலாக 6 ஆயிரம் என 9, 10, 11 ஆகிய தேதிகளில் மொத்தம் 10 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பண்டிகை முடியும்வரை, நகருக்குள் கனரக வாகனங்களை இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி ஏற்படாத வகையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடங்களை நிர்ணயிக்க அவற்றின் உரிமையாளர் பிரதிநிதிகளோடு பேசி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x