Published : 04 Jan 2018 09:40 AM
Last Updated : 04 Jan 2018 09:40 AM
மக்கள் ஒத்துழைப்பும் காவல்துறையின் புதிய வியூகமும்தான் பெண்கள் பாதுகாப்பில் சென்னைக்கு முதல் இடம் கிடைக்கக் காரணம் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. போற்றுதலுக்குரிய பிறப்பாக கருதவேண்டிய பெண்கள் கேலி, கிண்டல், பாலியல் வன்கொடுமை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
வெளியில் மட்டும் அல்ல குடும்பத்துக்குள்ளேயும் பல்வேறு எதிர் வினைகளை எதிர்கொள்கின்றனர். அதுவும் பணிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அலுவலகத்துக்குள்ளேயும் வெளியேயும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.
சென்னைக்கு முதல் இடம்
இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரம் ஒன்றை கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை உட்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விபரங்கள் இருந்தன. இதில், பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ள நகரமாக சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளது.
டெல்லி கடைசி இடம்
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. 78 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்து 808 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதாவது ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை யை பொருத்தவரை லட்சத்தில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதல் இடத்தை பிடித்திருப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பும், காவல்துறையின் புதிய வியூகமும்தான் காரணம் என்கிறார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். சென்னைக்கு இந்த இடம் கிடைக்க பல் வேறு நடவடிக்கைகள், சவால் கள் இருந்ததாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
பாதிக்கப்படும் பெண்கள் நேரடியாக வராமல் தங்கள் புகார்களை ஆன்லைன் மூலமும் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 2017-ல் 1,876 புகார்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்க 1091 என்ற பெண்களுக்கான உதவி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 24 மணி நேரமும் பெண் காவலர்கள் அழைப்புகளை பெற்று பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றனர். 2017-ல் மட்டும் 20,152 அழைப்புகள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண் வரவேற்பாளர்கள்
பெண்கள் எந்தவொரு தயக்கமின்றியும், பயமின்றியும் தங்களின் குறைகளை தெரிவிக்க தலா ஒரு பெண் காவலர்கள் சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பெண்களின் குறைகளை போக்குவதற்கு மட்டும் சென்னையில் முழுக்க முழுக்க பெண் போலீஸாரே ஆன 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. பாதிக்கப்படும் பெண்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் எப்போதும், இங்கு பெண் போலீஸார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுழற்சி முறையில் ரோந்து பணி
சென்னையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 135 காவல் நிலையங்களிலும் ஒரு காவல் நிலையத்துக்கு 4 செக்டார் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் கல்லூரி மற்றும் அதிகமாக பெண்கள் பணிபுரியும் இடங்களில் முக்கிய நேரங்களில் நிறுத்தப்பட்டு பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
சாதாரண உடை அணிந்த போலீஸார் பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்களோடு மக்களாக நின்றவாறு பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு யாரேனும் தொந்தரவு கொடுக்கிறார்களா என்றும் கண்காணித்து வருகின்றனர்.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளை விசாரிக்க எல்லா அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் குழு அமைக்கப்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கிறோம்.
சென்னையில் இரவு நேரங்களில் வேலை முடித்து வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்புக்காக அதிக ரோந்து காவலர்கள் முக்கியமான இடங்களில் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் தனிப்பிரிவு 2017 ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு
குடிசைப் பகுதிகளில் பெண்கள் நல ஆர்வலர்கள், பொதுநல ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து அடிக்கடி அவர்கள் பகுதிகளில் முகாம் நடத்தி பெண்களின் பாதுகாப்பு அவர்களின் நலன் மற்றும் மேம்பாடு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பெண் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
காவல் கட்டுப்பாட்டு அறை
கூடுதல் காவல் ஆணையர்கள் எம்.சி.சாரங்கன் (தெற்கு), எச்.எம்.ஜெயராம் (வடக்கு) நேரடி மேற்பார்வையில் 12 துணை ஆணையர்கள் தினமும் ஒருவர் என்ற விகிதத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் கட்டுப்பாட்டு அறை (100) உள்ளிட்டவைகளுக்கு வரும் புகார் அறிந்து உடனடியாக சம்பவ இடம் விரைந்து பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றனர்.
சைபர் கிரைம் போலீஸ்
பெண்கள் உட்பட யாரேனும் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டால் சைபர் கிரைம் போலீஸார் உதவியையும் நாடுகிறோம். அடுத்த சில மணி நேரங்களில் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்து வைத்து விடுகிறோம். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டால் சைபர் கிரைம் போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் விபரம் வெளியிடப்படுவதில்லை. இதனால், பாதிக்கப்படும் பெண்கள் நம்பிக்கையுடன் புகார் தெரிவிக்கின்றனர். காவல்துறையின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். இதனால் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெண்களின் பாதுகாப்பு முழு அளவில் உறுதி செய்யப்படுகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT