Published : 08 Nov 2023 03:40 PM
Last Updated : 08 Nov 2023 03:40 PM
புதுச்சேரி: வெளிநாட்டு நபர்கள் ஊடுருவல் தொடர்பாக புதுச்சேரியில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி கொல்கத்தா இளைஞர் பாபுவை (26) கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பகுதிகளில் வங்கதேசம், மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். இதுபோல இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊடுருவச் செய்துள்ளது. சிலர் கொத்தடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அசாம் மாநிலத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வெளிநாட்டினர் சட்ட விரோத ஊடுருவல், கடத்தி விற்பதில் ஏஜெண்டுகள் பங்கு வகித்துள்ளனர்.
இந்த ஏஜெண்டுகளின் பட்டியல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பரவியுள்ள ஏஜெண்டுகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் பள்ளிக்கரணை, மறைமலைநகர், படப்பை உட்பட பல பகுதிகளில் சோதனை நடந்தது. இதேபோல புதுவையில் எல்லை பிள்ளை சாவடியில் 100 அடி சாலையில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான பகுதி உள்ளது. இதன் காம்பவுண்டு சுவரையொட்டி ஒரு சிறிய கேட் உள்ளது. இதற்குள் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள குடோவுன் உள்ளது. இதன் மாடியில் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீஸார் உதவியோடு இன்று சோதனை செய்தனர்.
அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே.பாபு (26) என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தினர். காலையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். கோரிமேட்டில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அவரை கொண்டுச்சென்று விசாரணை நடத்தினர். அவர் மூலம் வெளிநாட்டிலிருந்து நபர்கள் ஊடுருவியுள்ளனரா, புதுவை உட்பட வெளிமாநிலங்களில் கொத்தடிமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளனரா என்பது பற்றி விசாரித்தனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT