Published : 09 Jul 2014 12:00 AM
Last Updated : 09 Jul 2014 12:00 AM

எருமைகளைக் காக்க 8 ஆண்டு போராட்டம்- தோடர்களுக்கு வழிகாட்டிய வாசமல்லி

சக மனிதர்களைப் பற்றிக்கூட சிந்திக்காதவர்கள் உள்ள இந்தக் காலத்தில், தங்களை வாழ வைக்கும் தெய்வங்களான எருமை மாடுகளை காப்பாற்ற தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் தோடர் குலத்து பட்டதாரியான வாசமல்லி.

பழங்குடியினரான தோடர்கள், நீலகிரியில் கணிசமாக வசிக்கின் றனர். வாசமல்லியும் இந்த இனத்தைச் சேர்ந்த பெண்தான். குண்டாறு அருகிலுள்ள காரிகாடு மண்டு என்ற ஊரைச் சேர்ந்த வாசமல்லி, எட்டாம் வகுப்பு வரை குருகுல கல்வி படித்தவர். பள்ளிப் படிப்பை முடித்ததும் மலைப் பிரதேசத்தைவிட்டு வெளியில் வந்து பட்டப்படிப்பு படிக்க நினைத்தார். ஆனால், பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு நடந்தவற்றை வாசமல்லியே விவரிக்கிறார்..

நான் கோவையில் உள்ள அவிநாசி லிங்கம் பல்கலை.யில் பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போதே எங்கள் சமுதாய மக்களின் அறியா மையைப் போக்கி பெண்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எனக்குள்ளேயே ஒரு தீர்மானம் இருந்தது.

அந்த நேரத்தில், எங்கள் இனத்தைச் சேர்ந்த போதலிக் குட்டன் என்பவர் இளைஞர் அமைப்பின் மூலம், தோடர் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். தோடர் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களை ஒருங்கிணைத்து போராடினார். அவரோடு இணைந்து நானும் பணியாற்றினேன். தோடர்கள், தங்களுக்கு வாழ்வு கொடுக்கும் தோடா எருமைகளை சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் அடித்துக் கொல்வார்கள். அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதுதான் போதலிக் குட்டனின் முதன்மை பிரச்சாரமாக இருந்தது.

‘அது அவர்களின் நம்பிக்கை; அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது’என்று ஆரம்பத்தில் நானும் அவரோடு மல்லுக்கு நின்றேன். ஆனால், போகப் போக அவரது பேச்சில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நானும் மாறிவிட்டேன். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டே சமுதாயப் பணிகளை மேற்கொண்டேன்.

2002-ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, முழு நேரமும் சமுதாயப் பணிக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். தோடா எருமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘பஞ்சபாண்டவர் தோடா எருமை மாடு வளர்ப்போர் சங்க’த்தின் இணைப்பாளராக இருந்தேன். எங்கள் சமூகத்தில் பிறப்பிலிருந்து இறப்பு வரை எருமை மாடுகள் கூடவே வரும். பெண்களுக்கு எருமைகளை சீதனமாக கொடுப்போம். குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கும் தாய் மாமனுக்கும் மாடு கொடுப்போம். எருமை நெய் இல்லாமல் கோயில்களில் விளக்கு ஏற்ற மாட்டோம். நாங்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணமே தோடா எருமைகள்தான். மூலிகைச் செடிகளை தின்று வளர்வதால் அவை தரும் பாலை குடிக்கும் எங்களை நோய்கள் அண்டுவதில்லை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தோடா எருமைகளை சடங்குகள் என்ற பெயரில் கொன்று அழித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் சமூகத்தில் யாராவது இறந்துவிட்டால் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்களது வீட்டில் உள்ள எருமைகளில் ஒன்றை மேற்கு திசை நோக்கி துரத்தி விடுவர். அது இயற்கையாக மரணமடைந்து, இறந்தவர்களுக்கு இன்னொரு உலகத்திலும் பால் கொடுக்கும் என்பது எங்கள் முன்னோர்களின் நம்பிக்கை. காலப்போக்கில், மாடுகளை மேற்கு திசை நோக்கி துரத்துவதற்கு பதிலாக இறந்தவர்களின் சவக்குழிக்கு அருகிலேயே கொன்று புதைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதைத்தான் எட்டு ஆண்டுகளாக தீவிர பிரச்சாரம் செய்து தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இப்போது பெரும்பாலும் எருமைகளை யாரும் கொல்வதில்லை. என்றா லும் எங்காவது ஒரு சிலர் இன்னும்

பழமையிலிருந்து விடுபடமுடியா மல் எருமைகளை கொன்றுவிடு கிறார்கள். அவர்களையும் நெறிப் படுத்த தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்தகட்டமாக, மிக தொன்மையான தோடர் மொழிக்கு அகராதியை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறேன். இது முழுமை பெற்றால் தோடர் மொழிக்கும் எழுத்து வடிவம் கொடுத்துவிடலாம். இதேபோல், எங்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் பழைய தோடர் பாடல்களை தேடிப்பிடித்து ஆவணப்படுத்தும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். அந்த ஆவணம் தோடர்களின் வாழ்க்கை முறையை காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும்... பூரிப்புடன் சொல்லி முடித்தார் வாசமல்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x