Published : 08 Nov 2023 06:15 AM
Last Updated : 08 Nov 2023 06:15 AM

அமைச்சர் சேகர்பாபு இந்து என்பதில் பெருமை கொள்கிறார்; ஆனால் சனாதனவாதியல்ல: மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி வாதம்

சென்னை: ‘அமைச்சர் சேகர்பாபு இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறார்; ஆனால் அவர் சனாதனவாதியல்ல’ என அவர் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் என்.ஜோதி வாதிட்டார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் தரப்பில் கோ-வாரண்டோ மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்தன.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிஅனிதா சுமந்த் முன்பாக நேற்று நடந்தது. அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘இந்த வழக்கில் சட்டப்பேரவை சிறப்பு செயலாளருக்குப் பதிலாக சட்டப்பேரவை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர். சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பான வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களையும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை. சரியான எதிர்மனுதாரர்களை இந்த வழக்கில் சேர்க்காததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி வாதிட்டதாவது: உள்நோக்கத்துடன் வழக்கு: அமைச்சர் சேகர்பாபு தீவிர ஐயப்ப பக்தர். சேகர்பாபு இந்துவாகஇருப்பதில் பெருமை கொள்கிறார். ஆனால் அவர் சனாதனவாதியல்ல. இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்களுக்கு எதிராக அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் நடவடிக்கை எடுத்ததால் உள்நோக்கத்துடன் அவருக்கு எதிராகஇந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

சனாதனமும், இந்து மதமும் ஒன்று அல்ல. இந்து மதம் பழமையானது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் கூட சனாதனத்தை ஏற்கவில்லை. வள்ளலாரும் இந்துதான். இந்து மதம் தோன்றிய பிறகே சனாதன தர்மம் உருவாக்கப்பட்டுள்ளது. பரந்து, விரிந்த இந்து மதத்தை சனாதனம் என்ற சிறிய வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது.

ஒருபோதும் மனிதனால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது. மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டுள்ள சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியதில் எந்த தவறும் இல்லை. சாதீய நடைமுறைகள் தமிழகத்தைச் சீரழித்து இருக்கிறது. இந்து ஒருவர்கோயிலுக்குள் சுவாமி கும்பிடுவதற்குக்கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை ஒழிக்கவே விரும்புகிறோம்.

பைபிள், குர்-ஆன் போல மனுஸ்மிருதி ஒன்றும் புனித நூல் அல்ல. அதற்கு எதிராக பேசுவது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும்? எனவே அரசியல்சாசனத்துக்கு எதிரான இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சாதீயத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிக்கும் சனாதன தர்மத்தை ஏற்கச் செய்யும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா தரப்பு வாதத்துக்காக இன்றைக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x