Published : 07 Nov 2023 01:43 PM
Last Updated : 07 Nov 2023 01:43 PM
சென்னை: “தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மின்கட்டண உயர்வால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்திருக்கும் நூல் உற்பத்தி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருப்பதால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு பின்னர் பொருளாதார மந்தநிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை என ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முற்றிலும் முடங்கும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளான நிலைக்கட்டண உயர்வு மற்றும் உச்ச நேர மின் கட்டணத்தை ரத்து செய்து தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT