Published : 07 Nov 2023 05:09 AM
Last Updated : 07 Nov 2023 05:09 AM
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இரண்டு நாள் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்களில், பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் புதிதாக மனு அளித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக். 27-ம் தேதி தொடங்கியது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான பணிகள்தொடங்கின. பொதுமக்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும், நேரில் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களிடமும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், கடந்த 3-ம் தேதி நிலவரப்படி, நேரிலும், ஆன்லைன் மூலமும்36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. குறிப்பாக, அதில் பெயர் சேர்ப்பதற்குமட்டும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து 15,187பேர் வழங்கியிருந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், பொதுமக்கள் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது,‘‘ தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், அதிகளவிலான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இப்பணிகளை ஆய்வு செ்ய்தனர். இந்த சிறப்பு முகாம்களில், பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6ஐ 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 பேரும், ஆதார் இணைப்புக்கான படிவம் ‘6 பி’ ஐ 762 பேரும், பெயர் நீக்கத்துக்கான படிவம் 7ஐ 36,368 பேரும், முகவரி மாற்றத்துக்கான படிவம் 8ஐ 1,55,882 பேரும் என 6 லட்சத்து 112 பேர் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, வரும் நவ.18, 19 ஆகிய இரு தினங்களும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT