Published : 07 Nov 2023 07:22 AM
Last Updated : 07 Nov 2023 07:22 AM

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: அதிமுக, பாமக, அமமுக கடும் எதிர்ப்பு

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. இது ஏற்புடையதல்ல. தமிழகத்தின் வளத்தை பாதிக்கும் இத்திட்டத்துக்கு திமுக அரசு துணை போகாமல் உடனடியாக நிராகரிக்க வேண்டும்.

கடந்தகால திமுக ஆட்சியில் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, பின்னர் படித்து பார்க்காமல் கையெழுத்திட்டதாக கூறிய வரலாறை அனைவரும் அறிவோம். அதேபோல இவ்விவகாரத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியமாக நடந்து கொள்ளாமல், உடனடியாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்துக்கு அனுமதியை மறுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க மத்திய ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரியிருக்கிறது.

இத்திட்டத்தில் நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமும் உண்டு. இதனை பயன்படுத்தி விளைநிலங்களை மலடாக்கி, பாலைவனமாக்கும் ஆபத்தான இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியிருக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும். இதனால் மாநிலத்தின் இயற்கை வளங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும்.

ஏற்கெனவே வறட்சி மிகுந்த மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை மேலும், பாலைவனமாக்கும் இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும். இத்துடன் விவசாயிகள் நலன் கருதி ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x