Published : 07 Nov 2023 06:10 AM
Last Updated : 07 Nov 2023 06:10 AM

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆஜர்: விசாரணையை நவ.22-க்கு தள்ளி வைத்தது தருமபுரி நீதிமன்றம்

வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்.

தருமபுரி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், கடந்த அதிமுக ஆட்சியின்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். 2016 முதல் 2021-ம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, 2022-ம்ஆண்டு ஜன. 18-ம் தேதி கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில், ரூ.45.20 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித் தனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், அறக்கட்டளை நிர்வாகி தனபால் உட்பட 11 பேர் சேர்க்கப்பட்டனர். கடந்தமே மாதம் 22-ம் தேதி இந்த வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, ஜூலை 13-ல் வழக்கு விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் விசாரணை தொடங்க இருந்த நிலையில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மூலம் உரியவர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டு விசாரணைப் பணிகள் தொடங்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா உள்ளிட்ட 11 பேரும் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வரும் 22-ம்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி மணிமொழி, அன்றைய தேதியில் அனைவரும் ஆஜராக வேண்டும் என தெரிவித்தார். அன்று 11 பேருக்கும் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்களில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x