Published : 07 Nov 2023 06:06 AM
Last Updated : 07 Nov 2023 06:06 AM

இலங்கை ‘நாம் 200’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை புறக்கணிப்பு: திமுக, மதிமுக கண்டனம்

சென்னை / விருதுநகர்: இலங்கையில் மலையக தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை ஒளிபரப்பப்படாததற்கு திமுக, மதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மலையகத் தமிழர்கள் தொடர்பான ‘நாம் 200’ நிகழ்ச்சி, இலங்கை - இந்திய அரசின் பங்களிப்புடன், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமானால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில், மலையகத் தமிழர்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கியிருந்தார். ஆனால், இந்த வாழ்த்துரை ஒளிபரப்பப்படாதது தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இந்நிலையில், வாழ்த்துரை ஒளிபரப்பப்படாததற்கு திமுக சார்பில் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் காணொலி உரையை ஒளிபரப்பக் கூடாது என மத்திய பாஜக அரசு தடை விதித்ததாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில் தமிழக முதல்வரை சிறுமைப்படுத்துவதற்கு முயன்ற பாஜகவின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, முதல்வருக்கு பதில் இலங்கை செல்ல இருந்த தங்கம் தென்னரசு, தனது பயணம் ரத்து செய்தார். இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வருக்குப் பதில் நான் இலங்கை செல்வதற்காக, மத்திய அரசின் வெளியுறவுத் துறையில் இருந்து உரிய அனுமதியைப் பெற கடந்த அக்.28-ம் தேதி பொதுத்துறை விண்ணப்பித்தது. பயண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருந்தேன். நவ.1-ம் தேதி இரவு 9 மணி வரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி வராததால், பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். ஆனால் இரவு 9.30 மணிக்கு மேல் அனுமதி வந்துள்ளது.

அதன்பின், நவ.2-ம் தேதி காலை 11 மணிக்கு இலங்கையில் இருந்து தமிழக முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, முதல்வரின் வாழ்த்து செய்தியை அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி உடனடியாக பகல் 2 மணிக்குள் வாழ்த்துச்செய்தி அனுப்பப்பட்டது. இந்த வாழ்த்துச்செய்தி அங்குள்ள செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் என்ன காரணத் தினாலோ முதல்வரின் வாழ்த்துச் செய்தி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப் படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x