Published : 25 Jan 2018 03:08 PM
Last Updated : 25 Jan 2018 03:08 PM
மதுரையில் 40 ஆண்டிற்கு பிறகு தொண்டை அடைப்பான் நோய்க்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த அரை நூற்றாண்டிற்கு முன் 'தொண்டை அடைப்பான்' நோய் தமிழகத்தை அச்சுறுத்திய ஒரு உயிர் கொல்லி நோய். 'காரிணிபாக்டீரியம் டிப்தீரியா’ (Corynebacterium diphtheriae) என்னும் பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது.
பொதுவாக இந்நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தொண்டையில் ஒரு சவ்வு உருவாகும். இந்தச் சவ்வு வீங்கி, தொண்டையை அடைக்கும். உணவை சாப்பிடவும், விழுங்கமும் முடியாது. ஒரு கட்டத்தில் மூச்சுத்தினறல் ஏற்பட்டு அந்தக் குழந்தை இறந்துவிடும்.
கிராமங்களில் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் கடந்த காலங்களில் அதிக குழந்தைகள் இந்நோய்க்கு இறந்துள்ளன. அதன்பிறகு போலியோவைப்போல் இந்நோயை முற்றிலும் ஒழிக்க டிபிடி (DPT) என்ற தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்பட்டது. அதனால், கடந்த 2008-ம் ஆண்டோடு இந்நோய் தமிழகத்தில் 100 சதவீதம் ஒழிக்கப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனாலும், இந்நோய் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க தற்போதும் ஒன்றரை வயது, இரண்டரை வயது, மூன்றரை வயதில் டிபிடி தடுப்பூசிப்போடப்படுகிறது.
இந்நிலையில் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட டிப்தீரியா நோய்க்கு (தொண்டை அடைப்பான் நோய்) தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையும், தனியார் மருத்துவமனையில் ஒரு குழந்தையும் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை மூடிமறைப்பதாக கூறப்படுவதால் அந்தக் குழந்தைகளின் முழு விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருதுபாண்டியனிடம் கேட்டபோது, "ஊமச்சிக்குளத்தை சேர்ந்த ராமு(8) என்ற குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் இறந்துள்ளது. அந்த குழந்தைக்கு டிப்தீரியா அறிகுறியை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால், உறுதி செய்யப்படவில்லை. தற்போது அந்த குழந்தையின் அண்ணனும் மருத்துவமனையில் அதே அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்த சிறுவனின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வெளியான பிறகு தெரிய வரும்" என்றார்.
தனியார் மருத்துவமனையில் இறந்ததாகக் கூறப்படும் குழந்தை பற்றி விவரம் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டிற்கு முன் கேரளாவில் பல மாவட்டங்களில் முறையாகத் தடுப்பூசி போடாததால் இந்த நோய்க்கு பல குழந்தைகள் இறந்தனர்.
வடமாநிலங்களில் சில மாதத்திற்கு முன் ஒரு சில குழந்தைகள் இந்நோய்க்கு இறந்ததாக கூறப்பட்டது. தற்போது மதுரையில் 2 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் தகவலால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை மருத்துவப்பிரிவுத் தலைவர் பேராசிரியர் எம்.தினகரன் கூறுகையில், "தமிழகத்தில் இந்நோயும், அதன் இறப்புகளும் கடந்த 40 ஆண்டாக இல்லை. குழந்தையின் தொண்டையில் இயல்பாகவே பாக்டீரியாக்கள் இருக்கதான் செய்யும். சத்து குறையும்போது தொண்டைப்பகுதியில் இந்நோய் பாக்டீரியாக்கள் பல்கி பெருகி தொண்டை அடைப்பான் நோயாக மாறிவிடுகிறது. தொண்டை வலிக்கும். காய்ச்சல், இருமல், சளித் தொல்லை இருக்கும். சளியில் ரத்தம் வெளியேறும். கழுத்தில் இரண்டு பக்கங்களிலும் நெறி கட்டும், இதுதான் இந்நோய் அறிகுறி" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT