Published : 31 Jul 2014 03:45 PM
Last Updated : 31 Jul 2014 03:45 PM

கும்பகோணம் வழக்கும் தீர்ப்பும் புதிராக உள்ளது: கல்வியாளர் கருத்து

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கும் தீர்ப்பும் புதிராக உள்ளது என்று பிரபல கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், 'தி இந்து'விடம் கூறும்போது, " 'தீ விபத்து ஏற்பட்ட நாள் தொட்டே அரசு திசை மாற்றும் செயலிலேயே ஈடுபட்டது. ஓலைக்குடிசை தான் காரணம் என்று மாநிலம் முழுவதும் பள்ளிகளில் இருந்த ஒலை, கீற்றுக்கூரைகள் ஒரே நாளில் அகற்றப்பட்டன.

பின்னர், விதிகளுக்கு முரணாக ஒரே கட்டிடத்தில் அரசு உதவிபெறும் பள்ளியோடு சுயநிதி, ஆங்கில வழிப் பள்ளிக்கும் அனுமதி அளிக்கப்பட்டதை மறைக்க அரசு முயற்சித்தது.

அனுமதி அளித்த பள்ளிக் கல்வி இயக்குநர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது ஒரு புதிர் என்றால், இன்றைய தீர்ப்பில் அனுமதிக்குப் பரிந்துரைத்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதும், அலுவலக ஊழியர் தண்டிக்கப்பட்டதும் மற்றொரு புதிர்.

விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது அரசின் கடமை. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு இழப்பீடு அளிக்க மறுத்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த செய்தியே ஓரளவு மனநிறைவைத் தருகிறது' என்றார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x