Published : 06 Nov 2023 06:25 PM
Last Updated : 06 Nov 2023 06:25 PM
சென்னை: "மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சார்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மீன்பிடிப் படகுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், IND-TN-12-MM-6376 என்ற பதிவு எண் கொண்ட 'ஹோலி ஸ்பிரிட்' என்ற படகில் கடந்த 22-10-2023 அன்று மீன்பிடிக்கச் சென்ற போது மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையினை ரத்து செய்திடவும், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் இன்று (நவ.6) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மாலத் தீவு கடலோரக் காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகின் ஓட்டுநருக்கு, கடந்த 1.11.2023 அன்று, மாலத்தீவு குடியரசின் மீன்வளம், கடல் வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகம், மாலத்தீவின் பணமதிப்பில் 42,00,000, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் மேற்படி அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும், அதுவரை, அந்த மீன்பிடிப் படகு மாலத்தீவு காவல் படையினரின் வசம் இருக்கும் என்றும் மாலத் தீவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளது.
மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும், மீன்பிடித் தொழிலை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்த அபராதத் தொகை மிக அதிகமானது. அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. இது அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நிரந்தரமாக வறுமையில் தள்ளிவிடும்.
இந்தப் பிரச்சினையில், மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சார்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மீன்பிடிப் படகுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் தக்க நேரத்தில் தலையிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கை, கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அந்த மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும் என தான் நம்புவதாக, முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT