Published : 06 Nov 2023 05:08 PM
Last Updated : 06 Nov 2023 05:08 PM

”அல்ட்ரா சானிக் சென்சார்” உடன் பல்லடுக்கு வாகன காப்பகம் - மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இனி பார்க்கிங் பிரச்சினை இல்லை!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் அமையும் ‘அல்ட்ராசானிக் சென்சார்’ அதிநவீன தொழில்நுட்பத்தில் அமையும் பல்லடுக்கு காப்பகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இருக்கிறதா என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். அதற்கான மொபைல் அப் மற்றும் வெப்சைட் வசதிகளுடன் அமையும் இந்த பல்லடுக்கு வாகன காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் மதுரையின் வரலாற்று பெருமையாக மட்டுமில்லாது உலக பிரசித்திப் பெற்ற ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. ஒரு நாளைக்கு 50,000-க்கும் மேற்பட்டோர் மீனாட்சியம்மன் கோயிலை வந்து பார்வையிட்டு செல்வதால் மதுரை நகரம், சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. மீனாட்சிம்மன் கோயில் வரக்கூடியவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்போது போதிய பார்க்கிங் வசதியில்லாமல் தடுமாறு கிறார்கள். அதனால், அவர்கள் ஆங்காங்கே கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் நிறுத்துவாதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளை கடக்கவும், கோயிலுக்கு வந்து செல்லவதிலும் பக்தர்கள், சுறு்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமத்தைப் போக்கக்கூடிய வகையில் மீனாட்சியம்மன் கோயில், வடக்கு ஆவண மூல வீதியில் ரூ.42 கோடியில் பல்லடுக்கு வாகன காப்பகம் (மல்டி லெவல் பார்க்கிங் ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்லடுக்கு வாகன காப்பகத்தில் ஒரே நேரத்தில் 120 கார்கள், 1,400 இரு சக்கர வானங்களை நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளன. மேலும், 120 புராதானப் பொருட்கள் விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தரைத் தளத்திற்கு கீழே உள்ள முதல் அடித்தளம் கார் பார்க்கிங் செய்யவும், இரண்டாவது அடித்தளம் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பல்லடுக்கு வாகன காப்பகத்தை எடுத்து நடத்துவதற்கு மாநகராட்சி "ஸ்பார்க் லென்ஸ்" என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டுள்ளது. அவர்கள், வாகன ஓட்டிகள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, இந்த பல்லடுக்கு வாகன காப்பகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதிகளை செய்து வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பெரியாறு பஸ் நிலையம் பல்லடுக்கு வாகன காப்பகம், மீனாட்சியம்மன் கோயில் பல்லடுக்கு வாகன காப்பகம் இரண்டுமே ஸ்பார்க் லென்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக "அல்ட்ராசானிக் சென்சார்" என்று நவீன தொழில் நுட்பவசதிகளை பயன்படுத்தி, மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள பல்லடுக்கு வாகன காப்பகத்தில் மக்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான வசதிகளை செய்து வருகிறோம்.

இந்த வாகன காப்பகம் முன் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் மொத்தமுள்ள பார்க்கிங் இடங்கள், அதில் எவ்வளவு கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள பார்க்கிங் இடங்கள் போன்ற விவரங்கள் ஓடிக் கொண்டிருக்கும். அதனால், வாகன ஓட்டிகள், வாகன காப்பகத்தின் உள்ளே செல்லாமலே வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்நிறுவனம் சார்பில் ஒரு வெப் சைட் மற்றும் மொபைல் அப் தயார் செய்து வருகிறது.

அந்த "மொபைல் அப்"பை பயன்படுத்தி, நகரின் எந்த பகுதியில் இருந்து கொண்டும் மீனாட்சியம்மன் கோயில் பல்லடுக்கு வாகன காப்பகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் உள்ளதா என்பதை அறியலாம். மேலும், இந்த வாகன காப்பகத்தில் வாகனங்களை அதன் பார்க்கிங் இடத்தில் நிறுத்துவதற்கு முன் பச்சை விளக்கு பல்பு எரிந்து கொண்டிருக்கும்.

வாகனங்களை நிறுத்தியப் பிறகு சிகப்பு பல்பு எரியும். பச்சை பல்பு எரிந்தால் அதில் வாகனங்களை நிறுத்தலாம் என்றும், ரெட் பல்பு எரிந்த இடத்தில் ஏற்கெனவே ஒரு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளலாம். தற்போது பரி சோதனை அடிப் படையில் இந்த பல்லடுக்கு வாகன காப்பத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் இரு வாரத்துக்குள் நவீன தொழில் நுட்ப வசதிகளை அமைத்தப் பிறகு இந்த பல்லடுக்கு வாகன காப்பகம் திறக்கப்பட உள்ளது. காருக்கு 3 மணி நேரத்திற்கு ரூ.40, அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.20 கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் கார் நிறுத்த ரூ.120 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்திற்கு 3 மணி நேரத்திற்கு ரூ.15, அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கூடுதலாக ரூ.10 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x