Published : 06 Nov 2023 03:01 PM
Last Updated : 06 Nov 2023 03:01 PM
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்படும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் உயிர்காக்கும் மருந்துகள் விற்பனை மையத்தில் இன்சுலின் மருந்து இல்லாததால் சர்க்கரை நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) மாத்திரை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்து அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கி வருகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்து, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான விலை உயர்ந்த மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தனது விற்பனை மையத்தை நடத்தி வருகிறது.
சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். அரசு மருத்துவ மனைகளில் டைப்-1 சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே இன்சுலின் மருந்து இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதேநேரம், டைப்-2 சர்க்கரை நோயாளிகள், இந்த விற்பனை நிலையத்தில் குறைந்த விலையில் இன்சுலின் மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலேயே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் இந்த விற்பனை நிலையம் செயல்படுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து குறைந்து விலையில் மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் விற்பனை நிலையத்தில் இன்சுலின் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், கடந்த ஒருவாரமாக இன்சுலின் மருந்து இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்சுலின் மருந்து வாங்க வரும் சர்க்கரை நோயாளிகளிடம், 'தற்போது மருந்து இல்லை, அடுத்த வாரம் வந்து பார்க்குமாறு' அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். தினந்தோறும் இன்சுலின் மருந்து வாங்க வரும் நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ஓரளவு வசதியானவர்கள் வெளியில் இன்சுலின் வாங்கிக் கொள்கின்றனர். ஏழை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் இல்லாததால் சர்க்கரைஅளவு அதிகரித்து பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக இன்சுலின் மருந்து வாங்க வந்த சர்க்கரை நோயாளி ஒருவரிடம் கேட்டபோது, “இங்கு மட்டும்தான் குறைந்த விலையில் இன்சுலின் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இன்சுலின் இருப்பு இல்லை என்கின்றனர்.
வெளியில் மருந்து கடைகளில் அதிக அளவு பணம் கொடுத்து இன்சுலின் மருந்து வாங்குவதற்கு வசதியில்லை. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இன்சுலின் மருந்தை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும்” என்றனர். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்திடம் கேட்டபோது, “நான் உடனடியாக ஆய்வு செய்ய சொல்கிறேன். நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை போலவே சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் குறைந்த விலையில் உயிர்காக்கும் மருந்து விற்பனை நிலையத்தை தொடங்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் திட்டமிட்டது. சில நிர்வாக காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் குறைந்த விலையில் உயிர்காக்கும் மருந்து விற்பனை நிலை யத்தை தொடங்கினால் நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...