Published : 06 Nov 2023 05:56 AM
Last Updated : 06 Nov 2023 05:56 AM
சென்னை: கேரள குண்டு வெடிப்பு எதிரொலியாக சமூக விரோத எண்ணத்துடன் தகவல் தேடுவோரைக் கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களுடன் சைபர் க்ரைம் போலீஸார் கைகோர்த்துள்ளனர்.
அவதூறு பரப்புதல், கலவரத்தைத் தூண்டும் வகையில் கருத்து பதிவேற்றம் செய்தல் உட்பட பல்வேறு வகையான ‘சைபர்’ குற்றங்கள் தொடர்பாக சென்னை சைபர் க்ரைம் மற்றும் மாநில சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வலைதள பக்கங்கள் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளன.
ஆனால், கூகுளில் நமக்கு தேவையான கருத்துகள், புகைப்படங்கள், யூடியூப் வீடியோக்களை தேடுவோர் யார்? எந்த வகை யானவற்றை தேடுகின்றனர் போன்ற தகவல்களை போலீஸாரால் உடனடியாக திரட்ட இயலாத நிலை உள்ளது. ஒருவர் சமூக விரோத செயலில் ஈடுபட்டு அதுதொடர்பாக அவர் பிடிபட்ட பின்னர்தான் அவரது செல்போன், லேப்-டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அதை ஆய்வு செய்த பின்னரே அவர் கூகுளில், யூடியூப்பில் எந்த மாதிரியான கருத்துகள் மற்றும் வீடியோக்களை தேடி உள்ளார் என்பதை போலீஸாரால் கண்டறிய முடியும். அவர் பிடிபடும் வரை அது தொடர்பான தகவல்கள் தெரியாது. அதேபோல், சமூக விரோத செயலில் ஈடுபடும் நோக்கில் செயல்பட்டாலும் அதை முன்கூட்டியே கண்டறிய முடியாது.
யூடியூப்பை பார்த்து... அண்மையில் கூட கேரளாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச் செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப் பட்ட டொமினிக் மார்ட்டின் என்பவர், ‘யூடியூப்பை பார்த்து வெடிகுண்டுகள் தயாரித்தேன்’ என போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையடுத்து, இதுபோன்ற தொரு அசம்பாவித சம்பவம் தமிழகத்தில் நடைபெற்று விடக்கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர். எனவே, இதுகுறித்து, தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமாருடன் அண்மையில் ஆலோசித்தார்.
இதையடுத்து, கூகுள் மற்றும் யூடியூப்பை கண்காணிக்கும் பணியை போலீஸார் தொடங்கி உள்ளனர். அதாவது வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயலில் ஈடுபடும் வகையில் அது தொடர்பாக யாரேனும் கூகுளில் தேடி உள்ளனரா? யூடியூப் வீடியோக்களை பார்த்துள்ளனரா? என அந்நிறுவன அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அதுதொடர் பான தகவலை தெரிவிக்கும்படி கேட்டுள்ளனர்.
இதன்மூலம் முன்னெச்சரிக்கை யாக சமூக விரோத மற்றும் அசம்பாவித செயல்களைச் செய்ய திட்டமிடுவோரைக் கண்டறிந்து, அவற்றை தடுக்க முடியும் என போலீஸார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் கூறும்போது, ‘‘சைபர் குற்றங்களைத் தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக டிஜிபி பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளார். தற்போது கேரளாவில் யூடியூப்பைப் பார்த்து ஒருவர் வெடிகுண்டு தயாரித்து அதை வெடிக்கவும் வைத்துள்ளார். எனவே, இதுபோன்றதொரு அசம்பாவித சம்பவம் தமிழகத்தில் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT