Published : 04 Jan 2018 10:02 AM
Last Updated : 04 Jan 2018 10:02 AM

ஒக்கி புயல் சேதத்தை மதிப்பிட ஆட்கள் இல்லை: வெளிமாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள் பணியில் ஈடுபடுகின்றனர்

தோட்டக்கலைத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் ஒக்கி புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளவும், பாதிப்பை மதிப்பிட்டு விவசாயிகளுக்கு விரைவாக இழப்பீடு வழங்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தோட்டக்கலைத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்கள் ஆகும்.

குமரியில் 80% தோட்டப்பயிர்

இதில், கன்னியாகுமரி மாவட்ட மொத்த வேளாண்மையில் 80 சதவீதம் தோட்டக்கலை பயிர்கள்தான் விளைவிக்கப்படுகிறது. உலகத்திலேயே தரமான ரப்பர் இந்த மாவட்டத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ரப்பர், பலா, வாழை, மரவள்ளிக் கிழங்கு, பாக்கு, மிளகு, ஏலக்காய், தென்னை உள்ளிட்ட அனைத்து வகை தோட்டக்கலை பயிர்களையும் அதிக பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தமிழகத்தில் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யக்கூடிய மானாவாரி நிலங்களே இல்லாத செழிப்பான மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. தேன் உற்பத்தியிலும் இந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் வீசிய ஒக்கி புயலால் குமரி மீனவர்கள் மட்டும் அல்லாது, தோட்டக்கலை பயிர்களை பயிரிட்ட விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசால் தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியாத நிலை உள்ளது.

காலியிடங்களால் பின்னடைவு

தோட்டக் கலைத்துறை அசுர வேகத்தில் செயல்பட வேண்டிய தருவாயில், காலி பணியிடங்களால் புயல் சேதத்தை மதிப்பிடுவதற்குக் கூட போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையுள்ளது. அதனால், தற்போது மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் குழு 2-ம் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக தோட்டக்கலை துறையில் 39 துணை இயக்குநர் பணியிடங்கள் உள்ளன. அதில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. 6 இணை இயக்குநர் பணியிடங்களில் 4 இடங்கள் காலியாக இருக்கின்றன. 2 கூடுதல் இயக்குநர் பணியிடங்களில் ஒன்று காலியாக உள்ளன. மற்றொரு பணியிடத்தில் பணிபுரிபவரும் விரைவில் ஓய்வுபெற உள்ளார். 1,608 உதவி தோட்டக்கலை அலுவலர்களில் 700 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை 9 ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றியத்துக்கு ஒரு உதவி இயக்குநர் வீதம் 10 உதவி இயக்குநர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 13 தோட்டக்கலை அலுவலர்கள் இருக்க வேண்டும். 4 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் 38 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், 4 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

அதனால், ஒக்கி புயல் சேதத்தை உடனடியாக மதிப்பிட முடியவில்லை. இழப்பீடு விரைவாக வழங்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஒரு ரப்பர் மரக் கன்றை ஊன்றினால் 7-வது ஆண்டில்தான் பால் எடுக்க முடியும். 60 ஆண்டுகள் மகசூல் கிடைக்கும். ஆனால், ரப்பர் மரங்கள் 40 ஏக்கர் வரை அடியோடு அழிந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர். புயலால் பெரும் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதோடு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து தோட்டக்கலைத்துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் கன்றுகள் வழங்கி நடுவதற்கு உதவி செய்ய வேண்டும்.

நிலத்தை செம்மைப்படுத்த முழு மானியத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். இல்லாவிடில், வேளாண்மையில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளவும், விவசாயிகளை பாதிப்பில் இருந்து துரிதமாக மீட்டெடுக்கவும், வழிகாட்டவும் தோட்டக்கலைத் துறையில் காலிப் பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒரு ஹெக்டேர் தோட்டக்கலை பயிரில் வரக்கூடிய வருவாய், 4 ஹெக்டேர் வேளாண் பயிரில் கிடைக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x