Published : 06 Nov 2023 05:30 AM
Last Updated : 06 Nov 2023 05:30 AM
திருச்சி: தமிழகத்தில் காவல் துறையை வைத்து சர்வாதிகார ஆட்சியை திமுக நடத்தி வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மணப்பாறையில் நேற்று நடைபயணம் மேற்கொண்ட போது பேசியது:
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் சாதாரண மக்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். மத்தியஅமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு என்று தடைசெய்தார். ஜல்லிக்கட்டுக்கு தடைவிலக காரணம் மோடி மட்டும்தான்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்டகுடும்ப கட்சியினர் மோடியைஎதிர்த்து கூட்டணி அமைத்துள்ளனர். மது அருந்துபவர்களால் வீட்டுக்கு செல்ல வேண்டிய சம்பளபணம், திமுகவினரின் சாராய ஆலைக்கு செல்கிறது. இதனால் தான் குடியை நாங்கள் எதிர்க்கிறோம். குடிநோய் மையங்களில் அமைச்சர்களே அட்மிட் ஆகும் நிலையில் தமிழகத்தின் குடி கலாச்சாரம் இருக்கிறது.
திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித் துறையினர் ஒரு வாரம் சோதனை நடத்தி, ரூ.1,225 கோடி வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர். தற்போது அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 3-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது சட்டப்பிரிவு 356-ஐபயன்படுத்தி 93 முறை பல ஆட்சிகளை டிஸ்மிஸ் செய்துள்ளது. ஆனால், மோடி எந்த ஆட்சியையும் கலைக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 22 ஆயிரம் பேருக்கு மட்டுமேஅரசு வேலை வழங்கி உள்ளது. டிஎன்பிஎஸ்சியில் ஊழல் நடப்பதால் வேலை தரவில்லை. 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறிய பிரதமர் மோடி, இதுவரை 8.50 லட்சம் பேருக்கு வேலை அளித்துள்ளார்.
பாஜகவினரை கைது செய்வதுதான் தமிழக காவல் துறையின் முக்கியமான வேலை. தமிழகத்தில் காவல் துறையை வைத்து சர்வாதிகார ஆட்சியை திமுக நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டபொதுச் செயலாளர் பொன்னுவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, மணப்பாறை காமராஜர் சிலை அருகே முறுக்குக் கடை ஒன்றில் அண்ணாமலை முறுக்கு பிழிந்து சுட்டு, அதை சுவைத்துப் பார்த்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு வழங்குமாறு கடைக்காரர் முறுக்கு பார்சல் ஒன்றை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT