Published : 06 Nov 2023 05:45 AM
Last Updated : 06 Nov 2023 05:45 AM
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மேலமாயனூர், கீழமாயனூர், ரங்கநாதபுரம், கட்டளை உள்ளிட்ட பகுதிகளில், அமராவதி கிளை வாய்க்கால் பாசனம் மூலம் 1,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால், மேலமாயனூர், கீழமாயனூர், ரங்கநாதபுரம், கட்டளை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, "கடந்த 25 ஆண்டுகளாக வடிகால் வாய்க்கால்களை சரிவர தூர்வாராததால், ஒருநாள் மழைக்கே பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளள.
ஆண்டுதோறும் இதேநிலை நீடிப்பதால், வாய்க்கால்களைத் தூர்வார வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்வரை செலவு செய்துள்ளோம். தற்போது பெய்த மழையால் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தேங்கிய நீர் விரைவில் வடியா விட்டால் பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது. எனவே, வாய்க்கால்களை முறையாகத் தூர்வாரி, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): கிருஷ்ணராயபுரம் 49, மாயனூர் 42, கரூர் 38, அரவக்குறிச்சி 16.20, மைலம்பட்டி 15, பஞ்சப்பட்டி 14.40, பாலவிடுதி 12.20, அணைப்பாளையம், தோகைமலை தலா 12, க.பரமத்தி 10, குளித்தலை 7, கடவூர் 6.20.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT