Published : 06 Nov 2023 06:25 AM
Last Updated : 06 Nov 2023 06:25 AM
அனகாபுத்தூர்: அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், ஜவஹர்லால் நேரு தெரு, டோபிகானா தெரு, சாந்தி நகர்உள்ளிட்ட தெருக்களில் சுமார் 700 வீடுகள் உள்ளன. அவற்றில் ஆற்றின்கரைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று 2-வது நாளாக இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
இந்நிலையில், வீடுகளை இழந்தபொதுமக்களை நாம் தமிழர் கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல்கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
இப்பகுதி மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்குவது மிகப்பெரிய கொடுஞ்செயல். பல இடங்களில் ஆக்கிரமிப்பு என்கிற குற்றச்சாட்டை வைத்து வீடுகளை இடித்து, மக்களை வெளியேற்றி, செம்மஞ்சேரி போன்ற நகரின் வெளிப் பகுதிகளுக்கு அனுப்பிவருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களைத் தலைநகரில் இருக்க விடக் கூடாது என்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் ஆக்கிரமிப்பு என்றால், அனகாபுத்தூர் பேருந்து நிலையமும் ஆக்கிரமிப்பு இடம் தானே? அதை ஏன் அகற்றவில்லை.
ஆக்கிரமிப்பை ஆரம்பத்திலேயே தடுக்காமல் இத்தனை வருடமாக மின் இணைப்பு, வாக்காளர் உரிமை, எரிவாயு இணைப்பு வழங்கிவிட்டு, வீட்டு வரியும் பெற்றுக்கொண்டு, தற்போது ஆக்கிரமிப்பு என்றால் யாருடைய தவறு.
இங்கு வசிக்கும் அனைத்து மக்களும் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள். இந்த நிலைமையில் இருக்கும் மக்களை மாநகரின் வெளிப்பகுதிக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள். இது அவசியமற்ற செயல்.
மதுரை உயர் நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், எம்எம்டிஏ அலுவலகம், திருவள்ளூர் நீதிமன்றம் எனஅனைத்தும் ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அகற்ற நீதிமன்றம் உத்தரவிடுமா? எனவே இது ஏற்புடையதல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் நான் மீண்டும் வந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT