Last Updated : 23 Jan, 2018 09:01 AM

 

Published : 23 Jan 2018 09:01 AM
Last Updated : 23 Jan 2018 09:01 AM

5 கிலோ சிறிய ரக சிலிண்டர்களுக்கு வரவேற்பு: சென்னையில் மேலும் 8 இடங்களில் விற்பனை தொடக்கம்

இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை செய்யும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, சென்னை நகரில் மேலும் 8 இடங்களில் இந்த சிலிண்டர் விற்பனையை தொடங் கியுள்ளது.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு என்று முறையே 14.20 கிலோ, 19 கிலோ என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.

அத்துடன், விடுதி மாணவர்கள், இடம் பெயர்ந்தோர் வசதிக்காக, கடந்த 2013-ம் ஆண்டு சென்னை, டில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூருவில், 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனைத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியது. இந்நிலையில், இந்த சிலிண்டருக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை யடுத்து, சென்னையில் மேலும் 8 இடங்களில் இந்த சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச் சேரி மண்டலத்தின் செயல் இயக்குநர் ஆர்.சித்தார்த்தன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

முன்பு வீடுகள் மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளுக்கான எரி வாயு சிலிண்டர்கள் வாங்குவது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது முன்பதிவு செய்த ஓரிரு நாட்களில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு விடுகின்றன. மேலும், இதைத் தவிர, 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அமுதம் அங்காடிகளில் விற்பனை

விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், சுற்றுலா செல்பவர்கள் உள்ளிட்டோரின் வசதிக்காக இந்த சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் திருவல்லிக்கேணி, பெரியார்நகர், நுங்கம்பாக்கம், அபிராமபுரம், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள டியூசிஎஸ் - அமுதம் அங்காடிகள் மற்றும் நீலாங்கரையில் உள்ள ஆர்க்கானிக் வேலி ஐலேண்ட் ஆகிய இடங்களில் இந்த சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த சிலிண்டர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து தற்போது அய்யப்பன்தாங்கலில் உள்ள கிரேஸ் சூப்பர் சூப்பர் மார்க்கெட், அண்ணாநகரில் உள்ள சந்தோஷ் சூப்பர் மார்க்கெட், படூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள கீரின் வேலி, சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள டெய்லி பஜார், போரூரில் உள்ள ஞானம் ஸ்டோர், அரும்பாக்கம் எம்எம் டிஏ காலனியில் உள்ள சரஸ்வதி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்ஸ், ஏ.கே.சூப்பர் மார்க்கெட் மற்றும் அரும்பாக்கம் என்எஸ்கே நகரில் உள்ள சந்திரா சூப்பர் மார்க்கெட் ஆகிய 8 இடங்களில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை அவசியம்

இந்த சிலிண்டரை வாங்கச் செல்லும்போது வாடிக்கையாளர் கள் தங்களது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். புதிதாக இந்த சிலிண்டர் வாங்கும்போது ரூ.1,331.50 கட்டண மாக செலுத்த வேண்டும். அத்துடன், ரெகுலேட்டருக்கு ரூ.177-ம், சிலிண்டரையும், கேஸ் ஸ்டவ்வையும் இணைக்கும் சுரக்ஷா ரப்பர் குழாய் 1.2 மீட்டர் அளவுக்கு ரூ.118-ம், 1.5 மீட்டர் அளவுக்கு ரூ.165-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். ஏற்கெ னவே, வாங்கிய சிலிண்டரை மீண்டும் ரீபிள் செய்ய ரூ.387 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x